டெல்லி போலீஸ் நாட்டில் உள்ள மற்ற போலீஸ்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
New Delhi: டெல்லியில் தீபாவளி தினத்தையொட்டி, 300 ரோந்து செல்லும் பைக்குகளை காவல்துறைக்கு வழங்கும் நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது-
காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வருபவர்களிடத்தில், காவலர்கள் மரியாதையாக பேச முடியாதா?. புகார் தெரிவிக்க வருபவர்களை மணிக்கணக்கில் காக்க வைக்கப்படுகின்றனர். அவர்கள் தண்ணீர் குடித்தார்களா என்றுகூட நாம் (போலீசார்) கேட்பதில்லை.
புகார் தெரிவிக்க வருபவர்களுக்கு டீ வழங்குவதற்காக வாய்ப்புள்ள காவல்நிலையங்கள் அருகே டீக்கடைகளை அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
அதற்கான நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் உங்களுக்கு வழங்கும்.
நல்ல மனிதர் என்பதற்கு முன் உதாரணமாக டெல்லி போலீசாரால் ஏன் இருக்க முடியவில்லை?. எனக்கு டெல்லி போலீசாரையும், காவல்நிலையங்களையும் பற்றி வரும் தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன.
மக்களை அணுகும் முறையில் போலீசார் அதிக மாற்றங்களை கொண்டு வர வேண்டும். காவல்நிலையத்தில் உதவிக்காக வருபவர்களிடத்தில் போலீசார் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.