வீரர்களின் சடலப்பெட்டியை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாங்கிச் செல்லும் காட்சி
New Delhi: காஷ்மீர் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவத்தினரின் சவப்பெட்டிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தாங்கிச் சென்றார். நேற்று நடந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ரிசர்வ் போலீஸ் வீரர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்ரமணியன், அரியலூரை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் சடலங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றன . இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வீரரின் இறுதி ஊர்வலத்தின்போது சடலப்பெட்டியை ராஜ்நாத் சிங் தாங்கிச் சென்றார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில், ''ரிசர்வ் போலீசாரின் தியாகத்தை இந்த நாடு ஒருபோதும் மறக்காது. புல்வாமாவில் நான் இறுதி அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். வீரர்களின் தியாகம் வீண்போகாது'' என்றார்.
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சடலங்கள் அங்கிருந்து வீரர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.