சட்ட விரோதமாக உடல் உறுப்புகள் விற்பனை செய்யும் தொழிலும் பெருகி வருகிறது என்றும் மாநிலங்களவை எம்.பி. கூறியுள்ளார்
New Delhi: டெல்லியில் மட்டும் சிறுவர்கள் உள்பட 25 ஆயிரம் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக மாநிலங்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி நேரத்திற்கு பிந்தைய நேரத்தின்போது மாநிலங்களவை உறுப்பினர் டி. சுப்பராமி ரெட்டி இந்த விவகாரத்தை எடுத்துப் பேசினார். மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் மிக எளிதாக கிடைப்பதாகவும், டெல்லி மட்டுமில்லாமல் வட இந்திய மாநிலங்களிலும் இதே சூழல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ' போதைப் பொருளுக்கு அடிமையானவர்களில் 83 சதவீதம் பேர் படித்தவர்கள். இந்த பிரச்னையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகவும் முக்கியமான பிரச்னை. பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுகிறது.
சட்ட விரோதமாக உடல் உறுப்புகள் விற்பனை செய்யும் தொழிலும் பெருகி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த தொழில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது. சிறு நீரகம், கல்லீரல், இதயம் போன்றவற்றை தானமாக பெறப்படும் பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த சட்ட விரோத உடல் உறுப்பு விற்பனை தொழிலில் மருத்துவர்களும் ஈடுபடுகின்றனர். ' என்று பேசினார்.
திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் மஞ்சன் பூனியா பேசுகையில், 'மாற்றுத் திறனாளிகள் அரசின் சலுகைகளை பெறுவதில் அவர்களுக்கு 80 சதவீதம் உடல் பாதிப்பு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை 50 சதவீதமாக குறைப்பதன் மூலம் ஏராளமானோர் பலன் அடைவார்கள்' என்று கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)