This Article is From Jul 16, 2019

தமிழில் தபால் துறை தேர்வு: மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் கடும் அமளி!

ஆங்கிலம், இந்தியில் தேர்வு நடைபெறுவதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழில் தபால் துறை தேர்வு: மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் கடும் அமளி!

மாநிலங்களவை இன்று மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

New Delhi:


தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 14 தேதி நாடு முழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னாள் தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்ட நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, ஆங்கிலம், இந்தியில் தேர்வு நடைபெறுவதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், தபால் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் இன்று திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பிர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். எனினும், அதிமுக எம்பிக்கள் சமாதானம் அடையாமல் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை தொடங்கியபோதும், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

தபால் துறை தேர்வை தமிழில் நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி முழக்கம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாளை விளக்கம் அளிப்பார் என இணை அமைச்சர் முரளிதரன் உறுதி அளித்தார். இந்த உறுதிமொழியை ஏற்காத அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து  அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 

 

.