வரும் காலங்களில் இது போன்று நடக்கக் கூடாது
New Delhi:
நாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்களின் பட்டியலை ஒவ்வொரு நாளும் மாலைக்குள் தனக்கு கொடுக்குமாறும் பிரதமர் மோடி கேட்கும் நிலையில், மாநிலங்களவை சபாநாயகர் வெங்கய்யா நாயுடு, அவைக்கு வராத காரணத்திற்காக, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சஞ்சீவ் குமார் பால்யனை அழைத்து எச்சரிக்கை விடுத்தார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாத் ஜோஷி, ஜெய் சங்கர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் வருகை குறித்து கேட்டறிந்தார். அதேபோல், நாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்களின் பட்டியலை ஒவ்வொரு நாளும் மாலைக்குள் தனக்கு கொடுக்குமாறும் பிரதமர் மோடி கேட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் பாஜக எம்.பிக்கள் முறையாக பங்குபெற வேண்டும் என்று தொடக்கம் முதலே மோடி வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று சபாநாயகர் வெங்கய்யா நாயுடு, அமைச்சர் சஞ்சீவ் குமார் பால்யனை அழைத்து, நேற்று முன்தினம் நிகழ்ச்சி நிரலில் உங்கள் பெயர் இருந்தது. ஆனால், உங்களை அழைத்த போது நீங்கள் அங்கு இல்லை. வரும் காலங்களில் இது போன்று நடக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்க என்று அவர் எச்சரித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பால்யன், வராததற்கு வருத்தம் தெரிவித்த அவர், இனி இது போன்ற நடக்காது என்று உறுதியளித்தார்.