மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 5-ல் மசோதா நிறைவேறியது.
New Delhi: திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறியது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதையடுத்து குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா கடந்த ஜூலை மாதத்தின்போது மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி திருநங்கைகளின உரிமையை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.
திருநங்கைகளுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. நாட்டில் தற்போது சுமார் 5 லட்சம் திருநங்கைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் இந்த மசோதாவில் திருநங்கைகள் பிச்சையெடுப்பது என்பது குற்றச் செயல் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்த பிரிவு நீக்கப்பட்டு மசோதா மக்களவையில் முதலில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 20-ம்தேதி மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார். தேர்வுக்குழு இன்று பரிந்துரை செய்ததை தொடர்ந்து மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.