பிஜு ஜனதா தளம் மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகள் ஆர்.டி.ஐ. திருத்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவளித்துள்ளன.
New Delhi: எதிர்க்கட்சிகளுக்கு கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஆர்.டி.ஐ. திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மக்களவையில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி இருந்தாலும், மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றும் அளவுக்கு அந்த கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. இதனால் கூட்டணியில் இடம்பெறாத மற்ற கட்சிகளின் உதவியை பாஜக நாடியுள்ளது.
இதன்படி தற்போது ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் மற்றும் தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் ஆர்.டி.ஐ. திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.
இதேபோன்று ஆந்திராவில் வலிமையாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் விஜய் சாய் ரெட்டி என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், ‘ஆர்.டி.ஐ. திருத்த மசேதாவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அதனை அனுப்ப வேண்டும் என்றும், தேர்வுக்குழுவுக்கு அதனை அனுப்ப வேண்டும் என்றும் கேட்பது முறையாகாது' என்றார்.
மாநிலங்களவையில் ஒரு மசோதாவை நிறைவேற்றுவதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவை தேவை. தற்போது பிஜூ ஜனதா தளம், பிடிபி, டி.ஆர்.எஸ். மற்றும் ஒய்.எஸ். ஆர். கட்சிகள் ஆதரவு அளித்தால் மொத்தம் உறுப்பினர்களின் பலம் 129-ஆக உயரும். இதனால் மசோதா எளிதில் நிறைவேறும் என தெரிகிறது.