வெண்கலத்தில் அமையவிருக்கும் ராமர் சிலைக்கு முதல்வர் ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார்.
Ayodhya: அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக மத்திய அரசுக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனால் உத்தர பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
இதற்கிடையே குஜராத்தில் உலகிலேயே மிகவும் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதன் உயரம் 182 மீட்டர். சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் குஜராத்தின் சர்தார் சரோவர் நதி ஓரத்தில் படேல் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், படேல் சிலையை விட ராமர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட வேண்டும் என்று உத்தர பிரதேச அரசை இந்துத்துவ அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் வெண்கலத்தில் அமையவிருக்கும் 221 மீட்டர் உயரம் கொண்ட ராமர் சிலைக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதுதொடர்பான கோப்புகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
சரயு நதிக்கரையில் இந்த பிரமாண்ட ராமர் சிலை அமைக்கப்படும். பாதப் பகுதி 50 மீட்டர் உயரமும், மேல் பகுதி 151 மீட்டர் உயரமும் கொண்டதாக இந்த சிலை அமைக்கப்படும். தலைக்கு மேல் அமையும் சத்ரா என் பகுதி 20 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும்.
அமைக்கப்படவுள்ள சிலையின் மாதிரி வடிவ புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே ராமர் கோயிலை கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி அயோத்தியில் இந்துத்துவ அமைப்புகள் இன்று போராட்டம் அறிவித்திருக்கின்றன. இதனால் அயோத்தியில் பெரும் பதற்றம் காணப்படுகிறது.