This Article is From Mar 21, 2020

நாடாளுமன்றம், சட்டப்பேரவை கூட்டத்தொடர்களை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையே சமூக இடைவெளிதான். இதற்காக மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவை கூட்டத்தொடர்களை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும்.

ஹைலைட்ஸ்

  • நாடாளுமன்றம், சட்டப்பேரவை கூட்டத்தொடர்களை ஒத்திவைக்க வேண்டும்
  • நாளை ஒருநாள் மக்கள் ஊரடங்கு அறிவிப்பு
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையே சமூக இடைவெளிதான்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவை கூட்டத்தொடர்களை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தளங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், பிரதமர் மோடியும் நாளை ஒருநாள் மக்கள் ஊரடங்கு அறிவித்துள்ளார். அதன்படி பொதுமக்கள் நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடைகள், அலுவலகங்கள், பஸ், ரயில்கள் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, "உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், நாடாளுமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர்கள் ஒத்தி வைக்கப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர். 

நாடாளுமன்ற, சட்டப்பேரவை நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம் என்றாலும், இதனால் மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நோய்த்தொற்று ஆபத்து அதிகரிக்கும் என்பது கவலையளிக்கிறது.

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வரும் தலைநகர் டெல்லி மிகக்குறைந்த நிலப்பரப்பைக் கொண்டது ஆகும். அதுமட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் பகுதியாகும். அதன் காரணமாக, நேற்றிரவு வரை 17 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையே சமூக இடைவெளிதான். இதற்காக மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்; அவ்வாறு கூடினாலும் ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தது 3 அடி இடைவெளி அவசியம் தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், நாடாளுமன்ற அவைகளாக இருந்தாலும், தமிழக சட்டப்பேரவையாக இருந்தாலும் மூன்று அங்குல இடைவெளி கூட இல்லாமல் மிகவும் நெருக்கமாகத்தான் உறுப்பினர்கள் அமர்ந்திருக்க வேண்டும். மையப்படுத்தப்பட்ட குளிரூட்டி வசதி கொண்ட அவைகளில் வைரஸ் எளிதில் பரவக்கூடும் என்பதால், மக்கள் பிரதிநிதிகளின் நலன் கருதி அவை நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

எனவே, நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கும்படி பிரதமரும், தமிழக முதல்வரும், அவைத் தலைவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.