This Article is From Feb 19, 2019

‘’ராமதாசுக்கு பணத்தைப் பற்றிதான் கவலை; மக்களைப் பற்றி கவலையில்லை’’-ஸ்டாலின் கடும் தாக்கு

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக – பாமக இடையே கூட்டணி அமைந்துள்ளது. அக்கட்சிகளுடன் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘’ராமதாசுக்கு பணத்தைப் பற்றிதான் கவலை; மக்களைப் பற்றி கவலையில்லை’’-ஸ்டாலின் கடும் தாக்கு

அதிமுக – பாமக கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்டாலின்

ஹைலைட்ஸ்

  • மக்களவை தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி அமைந்துள்ளது
  • அதிமுகவை ராமதாஸ் விமர்சித்ததை ஸ்டாலின் குறிப்பிட்டு பேசியுள்ளார்
  • எந்த தொகுதியிலும் பாமக வெற்றி பெறாது என்கிறார் ஸ்டாலின்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு பணத்தைப் பற்றித்தான் கவலை என்றும் மக்களைப் பற்றி கவலை கிடையாது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது-

அதிமுகவுடன் சேர்ந்த பாமக போட்டியிட்டபோது அவர்கள் 7 தொகுதிகளில் நின்றனர். அன்றைக்கும் மாநிலங்களவை எம்.பி. பதவி உறுதியளிக்கப்பட்டிருந்தது. 7 தொகுதியில் போட்டியிட்டு 9 தொகுதியில் தோற்பார்கள் என்று கூறினேன். ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது 2 மக்களவை எம்.பி.க்களுக்கு சமம்.

இப்போதும் அதே போன்றுதான் 7 மக்களவை தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். தேர்தலுக்கு பின்பு என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டும் பாருங்கள்.

இதே டாக்டர் ராமதாஸ் வெறும் மேடையில் பேசிவிட்டு செல்லவில்லை. அறிக்கை விடவில்லை. அதிமுகவின் கதை என்ற தலைப்பில் புத்தகமே எழுதியுள்ளார். அப்படிப்பட்டவர் இன்று அதிமுக நிர்வாகிகள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுகிறார். இதை அவர் வெட்கமாக உணரவில்லையா?

இப்படிப்பட்ட நிலைமையில் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் மக்களையோ, நாட்டையோ பற்றி கவலைப்படவில்லை. ராமதாஸ் பணத்தைப் பற்றிதான் கவலைப்படுகிறார்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.