New Delhi: ராமாயணத்தில் வரும் இடங்களுக்கெல்லாம் சுற்றுலா அழைத்துச் செல்லும் ஶ்ரீ ராமாயண யாத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 14-ம் தேதி மதுரையில் இருந்து பயணத்தை தொடங்குகிறது. 800 பேர் பயணிக்க இட வசதி கொண்ட இந்த ரயில் மதுரையில் பயணத்தை தொடங்கி, 15 நாட்கள் இந்தியா முழுவதும் உள்ள ராமாயணம் தொடர்பான இடங்களுக்கு செல்லும். பின் இறுதியாக 16-வது நாள் ராமேஸ்வரத்தில் இந்த பயணம் முடியும்.
இது தொடர்பான இந்திய ரயில்வே அறிவிப்பில் “ 16 நாட்கள் நடக்கும் சுற்றுப் பயணத்தில், நாடு முழுவதும் ராமாயணம் தொடர்பான இடங்களுக்கு இந்த ரயில் செல்லும். இலங்கையில் உள்ள இடங்களுக்கு செல்லவும் சுற்றுலா திட்டத்தில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பயணம் இந்த ரயில் பயணத்துக்கு முன்னதாகவே தொடங்குகிறது. நவம்பர் 2-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை அழைத்துச் செல்லப்படுவர். இதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும்.
உணவு, தங்குமிடம் மற்றும் குளியலுக்கு தர்ம்சலாக்களில் இடம் கொடுக்கப்படும். பேருந்து மூலம் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் ஏற்பாடுகள், சுற்றிப் பார்க்கும் ஏற்பாடுகள அனைத்தையும் சுற்றுலா மேலாளர் பார்த்துக் கொள்வார்.
மதுரையில் தொடங்கி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல், ரேனிகுன்டா வழியாக நின்று செல்கிறது. முதல் சுற்றுல் தளம், கிஷ்கிந்தா காண்டத்தில் இடம் பெற்றுள்ள ஹோஸ்பேட்.
அதன் பிறகு நாசிக் ரோட் சென்று, அங்கிருக்கும் பஞ்சவதி கோயிலுக்கு ( ஆரண்ய காண்டம்) அழைத்துச் செல்லப்படுவர். பின், சித்ராகூட் தம் ( அயோத்திய காண்டம்), தர்பங்கா (பால காண்டம்), சீதா மர்ஹி, ஜனக்பூர் (நேபாள்), அயோத்தியா மற்றும் நந்திகிராம் ( அயோத்திய காண்டம்), அலகாபாத் மற்றும் ஷ்ரிங்வெர்ன்பூர்( ஆரண்ய காண்டம்), இறுதியாக ராமேஸ்வரம் சென்று சேரும்.