This Article is From Mar 06, 2020

“துணிவில் இம்மாணவியும் திரௌபதிதான்!”- ராமதாஸ் சொன்ன சூசக கருத்து!!

“பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்குத் தேவையான பல செய்திகளைச்  சொல்லும் படம்"

“துணிவில் இம்மாணவியும் திரௌபதிதான்!”- ராமதாஸ் சொன்ன சூசக கருத்து!!

"பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம்! #திரௌபதி”

ஹைலைட்ஸ்

  • முன்னதாக திரௌபதி படத்தை தியேட்டரில் பார்த்தார் ராமதாஸ்
  • திரௌபதிக்கு அதிக பாராட்டுகள் தெரிவித்திருந்தார் ராமதாஸ்
  • தற்போதும் திரௌபதி படத்தை முன்னிருத்தி ட்வீட் செய்துள்ளார்

சென்னையில் பாலியல் தொல்லை கொடுக்க வந்த நபரை, எதிர்த்தாக்குதல் நடத்தி பள்ளி மாணவி ஒருவர் தன்னை தற்காத்துள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது. இது குறித்தான செய்தியைப் பல ஊடகங்களும் பிரசுரித்திருந்தன. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவியைப் பாராட்டியுள்ள பாமக-வின் நிறுவனர் ராமதாஸ், சூசகமா இன்னொரு கருத்தையும் கூறியுள்ளார். 

அவர், “சென்னையில் அரசுப் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்பட்ட தற்காப்புக் கலையின் உதவியுடன், கத்தி முனையில் பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற மிருகத்தை அடித்து விரட்டிய 13 வயது மாணவிக்குப் பாராட்டுகள். மாணவிகளுக்கு இத்தகைய துணிச்சலும், பயிற்சியும் மிகவும் அவசியம். துணிவில் இம்மாணவியும் திரௌபதி தான்!” என்று ‘திரௌபதி' படத்தைக் குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளார். 

மிகவும் சர்ச்சைக்குரிய திரைப்படமான ‘திரௌபதி' சென்ற வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ‘பழைய வண்ணாரப்பேட்டை' பட இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி'. மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு ‘காதல் வைரஸ்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்த ரிஷி ரிச்சார்டு இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரிஷியுடன் இப்படத்தில் ஷீலா, கருணாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு மனோஜ் நாராயணன் கேமரா கையாள, தேவராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்திலிருந்து வேல் முருகன் பாடிய ‘கண்ணாமூச்சி ஆட்டம்' பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளுடன் தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளார். அதன் பின்னர் அவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ், “பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்குத் தேவையான பல செய்திகளைச்  சொல்லும் படம். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம்! #திரௌபதி” என்று ட்விட்டர் மூலம் கருத்திட்டிருந்தார். திரௌபதி குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவித்திருந்த முதல் அரசியல் பிரபலம் ராமதாஸ்தான். 

.