Rameswaram:
இராமேசுவரம் (பிடிஐ) இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் இராமேசுவரத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தளமாக இராமேசுவரம் உள்ளது. இராமேசுவரத்திற்கு இயக்கப்படும் இரயில் சேவைகள், சுற்றுலா பயணிகளின் வருகைக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
நேற்று, செய்தியாளர்களை சந்தித்த தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.கே குல்ஷ்ரஸ்தா, 10 கோடி ரூபாய் செலவில் இராமேசுவரம் இரயில் நிலையத்தை புதுபிக்க திட்டம் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சார்பில், புதுப்பித்தல் பணிகளுக்காக ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பாம்பன் தூக்கு பாலத்தை மறு சீர்மைப்பு செய்யும் பணிகளை செயல்படுத்துவதற்காக, ஒரு ஆண்டுக்கு இராமேசுவரம் இரயில்வே சேவைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது. எனினும், இரயில் சேவைகள் முடங்காதபடி மாற்று பணிகள் குறித்து ஆலோசனை செய்து வருவதாக குல்ஷ்ரஸ்தா தெரிவித்தார்.
இராமேசுவரத்திற்கு புதிதாக இரயில்கள் இயக்கப்படும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், பண்டிகை காலங்களில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.