முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வருகின்றனர். இது அவர்களின் 5 கடமைகளில் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டில் நோன்பு நோற்பது மே 5-ம்தேதி தொடங்கியது. இதையடுத்து சூரிய உதயத்திற்கு முன்பாக உணவு உண்பதை முடித்துக் கொண்ட முஸ்லிம்கள், மாலை சூரியன் மறைந்த பின்னர் விரதத்தை முடித்து வந்தனர்.
ரமலான் பண்டிகையை பொறுத்தளவில் பிறை தெரிந்தால் மட்டுமே மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்று முன்தினம் பிறை தென்பட்டதால் அங்கு நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
தமிழகத்திலும் ஒரு சில முஸ்லிம் அமைப்பினர் ரம்ஜானை நேற்றே கொண்டாடினர். இந்த நிலையில் தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பிறை தென்பட்டதாக நேற்று இரவு அரசு தலைமைக் காஜிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தொழுகை நிறைவுற்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.