ரணிலின் வெற்றியால் ராஜபக்சேவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
Colombo: இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றிருக்கிறார். இன்னும் சில நாட்களுக்கு இலங்கை அரசியலில் பரபரப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ம்தேதி அதிபர் சிறிசேனா நீக்கினார். இதையடுத்து, இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டன.
பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் ரணில் விக்ரமசிங்கே இறங்கினார். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை கலைத்து சிறிசேனா நடவடிக்கை எடுத்ததுடன் ஜனவரி 5-ம்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். அவரது நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 117 உறுப்பினர்கள் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்ற வகையில் அவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இலங்கை அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்த உள்ளது. இது அதிபர் சிறிசேனாவுக்கும், அவரால் பிரதமர் என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சேவுக்ககும் கிடைத்த பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.