This Article is From Jul 20, 2018

பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட கேரள பாதிரியார்; சர்ச்சை வீடியோ வெளியீடு!

கேரளாவில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு பாதிரியார் ஒருவர், தன் தரப்பு நியாயங்களை சொல்லும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட கேரள பாதிரியார்; சர்ச்சை வீடியோ வெளியீடு!
Thiruvananthapuram:

கேரளாவில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு பாதிரியார் ஒருவர், தன் தரப்பு நியாயங்களை சொல்லும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் மீது புகார் அளித்துள்ள பெண் பற்றிய தனிப்பட்ட விவரங்களை சொல்லியுள்ளார். இது சட்டத்துக்கு எதிரானதாக இருப்பதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. யூடியூப்பில் பாதிரியாரால் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களில் நீக்கப்பட்டது. 

கேரளாவைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், தன்னை கடந்த 20 ஆண்டுகளாக மலங்கராவில் உள்ள சிரியன் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்த 4 பாதிரியார்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக போலீஸிடம் சில வாரங்களுக்கு முன்னர் புகார் கொடுத்தார். இதையடுத்து, பல பாதிரியார்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் பாதிரியார் அப்ரஹாம் வர்கீஸும் ஒருவர் ஆவார். பாதிரியார் வர்கீஸ், தனது தரப்பு நியாயங்களை தெரியப்படுத்தும் விதத்தில், யூடியூப்பில் ஒரு வீடியோவை பதிவேற்றினார். அந்த வீடியோவில், தன் மீது புகார் கொடுத்துள்ள பெண் பற்றிய தனிப்பட்டத் தகவல்களை சட்டத்துக்கு புறம்பாக வெளியிட்டார். சிறிது நேரத்தில் அந்த வீடியோ பதிவு அழிக்கப்பட்டது.

வீடியோவில் பாதிரியார் வர்கீஸ், ‘அந்தப் பெண் 4 ஆண்டுகளாக நான், அவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், அந்நேரத்தில் நான் அவர் இருக்கும் இடத்திலேயே வசிக்கவில்லை. அப்போது நான் ஐதராபாத்தில் இருந்தேன். மேலும், அவர் என் சொந்தக்காரரின் மகள். நாங்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவரின் அம்மாவிடம் பேசிய பிறகு தான், அவரது குணத்தில் இருக்கும் பிரச்னையைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் பொய் சொல்பவர், சுய பச்சாதாபம் தேடிக் கொள்பவர்’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இந்த வீடியோ பதிவு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ‘பாதிரியார் வர்கீஸ் செய்தது அறுவறுக்கத்தக்க செயல். ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாய் குறித்து இப்படி தரைகுறைவாக பேசியதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்’ என்றுள்ளார் கோபத்துடன். 

இந்த சம்பவம் தொடர்பாக 2 பாதிரியார்களை கேரள போலீஸ் ஒரு மாதத்துக்கு முன்னரே கைது செய்தது. இது தொடர்பான இரண்டு பாதிரியார்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். பாதிரியார் வர்கீஸ் மற்றும் இன்னொரு பாதிரியாரின் முன் ஜாமின் மனு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்து வருவதால், அவர்களை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 

.