85 ஆண்டுகளாக வெளிவராத பெஞ்சமினின் 21 நொடி வீடியோவை NFSA தற்போது வெளியிட்டுள்ளது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த thylacine அல்லது டாஸ்மானியன் புலி (Tasmanian Tiger) என்னும் மிருகம் இப்போது உலகில் எங்கும் இல்லை. ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா பகுதியில் உலவி வந்த வேட்டையாடிதான் இந்த டாஸ்மானியன் புலி.
கடைசியாக வாழ்ந்த டாஸ்மானியன் புலியின் பெயர் பெஞ்சமின். டாஸ்மானியாவிலிருந்த விலங்கியல் பூங்காவில் பெஞ்சமின் உயிர் வாழ்ந்தது. பெஞ்சமின் இறப்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் 1935 ஆம் ஆண்டு, அதை வீடியோவாக படம் எடுத்துள்ளனர். அதை National Film and Sound Archive of Australia (NFSA) என்னும் அமைப்பு பத்திரபட்டுத்தி தற்போது ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
85 ஆண்டுகளாக வெளிவராத பெஞ்சமினின் 21 நொடி வீடியோவை NFSA தற்போது வெளியிட்டுள்ளது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 1936 ஆம் ஆண்டு, செப்டம்பர் 7 ஆம் தேதி பெஞ்சமின் உயிர் இழந்தது. அதுவே உலகில் வாழ்ந்த கடைசி டாஸ்மானியன் புலி என்று அறியப்படுகிறது. அதன் நினைவாக ஆஸ்திரேலியாவில் தற்போது செப்டம்பர் 7 ஆம் தேதி, தேசிய அழிவின் விளிம்பில் வாழும் உயிரினங்களின் தினமாக போற்றப்படுகிறது.
'Tasmania the Wonderland' என்னும் பயனக் குறிப்பு வீடியோவிலிருந்துதான் பெஞ்சமினின் வீடியோ பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் ஒருவர், “இதுதான் தற்போது உலகிலேயே மனிதர்கள் பிடியில் உள்ள ஒரேயொரு டாஸ்மானியன் புலி. மனித நாகரீகத்தால் இவை அழிவிற்குத் தள்ளப்பட்டுள்ளன,” என்கிறார்.
“டாஸ்மானியன் புலி குறித்து நம்மிடம் நிறைய காணொலிக் காட்சிகள் இல்லை என்பதால், கிடைக்கும் ஒவ்வொரு நொடி வீடியோவும் மிகவும் முக்கியமானது. ஆன்லைனில் அனைவராலும் இந்த வீடியோவைப் பார்க்க முடியும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று பெருமிதத்தோடுப் பகிர்கிறார் NFSA-வைச் சேர்ந்த சைமன் ஸ்மித்.
ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட ஒரே நாளில் இதுவரை இந்த வீடியோவுக்கு 80,000 பார்வைகளுக்கு மேல் கிடைத்துள்ளன.
தி ஆஸ்திரேலியன் மியூசியம் அளிக்கும் தகவல்படி, “ஆஸ்திரேலிய கண்டம் முழுவதும் வாழ்ந்த உயிரினம் டாஸ்மானியன் புலி. ஆனால், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் அது மெயின்லேண்டிலிருந்து அழியத் தொடங்கியது. அதன் பின்னர்தான் டாஸ்மானிய தீவுகளில் மட்டும் அவை சுருங்கிப் போயின. நாய்கள் அதிக அளவு வந்ததனால் டாஸ்மானியன் புலி அழிந்திருக்கலாம். ஆனால், மனிதர்களின் வரவுதான் அவற்றின் அழிவிற்கு முக்கிய காரணமாகும்,” என்கிறது.
Click for more
trending news