சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தில் ஆணையை ஏற்று நேற்று பெண்களுக்குமாக சேர்த்தே கோயிலின் நடை திறக்கப்பட்டது
New Delhi: கேரளாவில் சபரிமலை கோயிலினுள் பெண்கள் நுழையத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்தும் பெண்கள் கோயிலினுள் செல்வதற்கு எதிராக பலவிதப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் கேரளாவின் சபரிமலை கோயிலில் நீண்ட காலமாக நிலவி வரும் பாரம்பரியத்தை மறந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமூகத்தில் பல ஆண்டுகளாக வழக்கில் இருந்து வரும் ஒரு பாரம்பரிய முறையை உச்ச நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. மத நம்பிக்கைகளையும் நம்பிக்கைக் கொண்டோரையும் கணக்கிலேயே வைக்கவில்லை' என்றுள்ளார்.
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தில் ஆணையை ஏற்று நேற்று பெண்களுக்குமாக சேர்த்தே கோயிலின் நடை திறக்கப்பட்டது. பல ஆண்டுகளாக நிலவி வந்த நடைமுறையை உடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் இதுவரையில் இன்னும் ஒரு பெண்ணால் கூட கோயிலினுள் செல்ல முடியவில்லை. மலை உச்சியில் உள்ள கோயிலை அடைவதற்கு இடையூறாக நிலக்கல் மற்றும் பம்பை அருகிலேயே பெண்கள் நுழைவதற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
செய்திகள் சேகரிப்பதற்காக சென்ற பெண் செய்தியாளர்கள் கூட தங்களது பணியை செய்யமுடியாமல் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். 'தி நியூஸ் மினிட்' பெண் செய்தியாளர் ஒருவரை உதைத்துத் தள்ளியதில், அவர் காயமடைந்துள்ளார். ‘ரிபப்ளிக்' தொலைக்காட்சி செய்தியாளர் மிகவும் கடுமையான முறையில் கட்டைகளால் தாக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாது பெண் சுகாதார பணியாளர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகள் கூட தாக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையிலும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்குச் செய்தி சேகரிக்க வந்த ‘தி நியூயார்க் டைம்ஸ்' பெண் பத்திரிகையாளர் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸார் நடந்து கொள்வதாக வலதுசாரி கட்சிகள் நேற்றைய தின முடிவில் பந்த் அறிவித்தனர்.மாநில பாஜக கட்சி இந்த கடையடைப்புக்கு ஆதரவு அளித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் பாரம்பரிய நம்பிக்கைகளை ஆதரிக்கிறது.