Puri Jagannath Yatra: வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் பூரி ரத யாத்திரை!
ஹைலைட்ஸ்
- பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் பூரி ரத யாத்திரை!
- அரசு விதிமுறைகளைப் பின்பற்றி இன்று காலை தேரோட்டம் தொடங்கியது.
- பாரம்பரிய இசைகள் இசைத்த படி, எடுத்துச்செல்லப்படுகிறது.
Puri/ New Delhi: வரலாற்றில் முதன் முறையாக உலக புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை ஏராளமான குருக்கள், கோயில் பணியாளர்களுடன் பக்தர்கள் இல்லாமல் இன்று காலை தொடங்கியது.
ஏழு நாட்கள் நடைபெறும் இந்த ரத யாத்திரை திருவிழாவை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் நடத்த உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, அரசு விதிமுறைகளைப் பின்பற்றி இன்று காலை தேரோட்டம் தொடங்கியது.
இதுதொடர்பான காட்சிகளில், கோவிலுக்கு வெளியே பெரும் கூட்டம் காணப்படுகிறது. திருவிழாவிற்காக மொத்த கோவிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குருக்கள் ஆண்டவர் பாலபத்ராவின் சிலையை தேருக்கு எடுத்துச்சென்றனர். தொடர்ந்து, சடங்குகள் தொடங்குவதற்கு முன்பு கோவில் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் ரத யாத்திரை தொடங்கியது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ட்வீட் செய்த பதிவில், சிலை தேருக்கு எடுத்துச்செல்லும் சமயத்தில் நடனமாடிய படியே, பாரம்பரிய இசைகள் இசைத்த படி, எடுத்துச்செல்லப்படுகிறது. மற்றொரு வீடியோவில் தேர் மீது சிலை ஏற்றப்பட பின்னர் ஒரு பெரிய கூட்டம் சூழ்ந்து நிற்கின்றது.
இதனிடையே, இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில், ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெறும் இந்த புனித நாளில் அனைவருக்கும் மனதார வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். பக்தி நிறைந்த இந்த பயணம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம், ஆரோக்கியத்தை தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.. ஜெய் ஜெகநாத்!! என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் ரத யாத்திரைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்த உச்ச நீதிமன்றம், நேற்றைய தினம் தனது தீர்ப்பை திரும்ப பெற்று, அரசு ரத யாத்திரை நடைபெறும் பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும், ரதத்தை இழுப்பதற்கு 500க்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளுடன் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதேபோல், ரத யாத்திரையில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொற்று இல்லாதவர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.