இந்த விவகாரத்தையொட்டி, ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல், தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
New Delhi: இந்திய ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. மேலும், இதுவரை மத்திய அரசு பயன்படுத்தாத வகையில் அதிகாரத்தை ரிசரவ் வங்கி மீது பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
இது குறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட நிதி அமைச்சகம், ‘பொது நலன் கருதி பல்வேறு சமயங்களில் இந்திய ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு தொடர்ந்து கலந்துரையாடியுள்ளது. இது குறித்து நடக்கும் விவாதங்கள் பற்றி மத்திய அரசு வெளிப்படையாக தெரிவித்ததில்லை. விவாதங்களின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து மட்டுமே பொதுத் தளத்தில் தெரிவிக்கப்படும்.
இந்திய பொருளாதாரத்துக்கும், பொது நலன் சார்ந்தும் தான் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இயங்க முடியும். இந்த காரணத்திற்காக, ரிசரவ் வங்கியுடன் சிலமுறை கலந்தாலோசிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, ஆர்பிஐ சட்டப் பிரிவு 7-ஐ பயன்படுத்தி, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கடிதம் அனுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. சட்டப் பிரிவு 7-ன் படி, ‘பொது நலன் கருதி, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் கலந்தாலோசித்தப் பிறகு, மத்திய அரசு சில வழிகாட்டுதல்களைக் கூறலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவை இதற்கு முன்னர் மத்திய அரசு பயன்படுத்தியது இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தையொட்டி, ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல், தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.