New Delhi: சில நாட்களுக்கு முன்னர் ட்ராய் அமைப்பபின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் வெளியிட்டார். கூடவே, ’இப்போது எனது ஆதார் எண்ணை வெளியிட்டுள்ளேன். இதை வைத்து என்ன செய்துவிட முடியும்’ என்ற சவால்விட்டார்.
அதற்கு நெட்டிசன்கள் ஒரு களேபரத்தையே உருவாக்கிவிட்டனர். அவரது வங்கி கணக்கில் 1 ரூபாய் டெபாசிட்செய்ததில் இருந்து அவரது பெயரில் பல போலி கணக்குகளில் பல்வேறு வர்த்தக இணையதளங்களில் உருவாக்கிவிட்டனர்.
ஆதார் குறித்து பொதுத் தளத்தில் கிடைக்கும் விவரங்களை வைத்து மேற்குறிப்பிட்ட வேலைகளை செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
ஹாக்கிங்-ஐ நேர்மறை காரணங்களுக்காக செய்யும் ஹாக்கர்கள் ஷர்மா விட்ட சவாலை ஏற்றுக் கொண்டு, ஆதார் கார்டில் இருக்கும் 14 தரவுகளை கண்டுபிடித்து எடுத்துள்ளனர். அதில் ஷர்மாவின், போன் நம்பர், அவரது வாட்ஸ்அப் போட்டோ, பான் கார்டு தகவல்கள், போன் மாடல், வாக்காளர் அட்டை எண் போன்றவை அடங்கும். அதே நேரத்தில், வங்கி பரிவர்த்தனைகள், பயோ-மெட்ரிக் விவரங்கள் போன்றவை ஹாக் செய்யப்படவில்லை.
ஆதார் கார்டை உருவாக்கிய குழுவின் தலைவராக ஷர்மா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டெக் வல்லுநரான கிங்ஸ்லி ஜான் ஆதார் குறித்து தெரிவித்த கருத்தை அடுத்து, இந்த சவாலை பொதுத் தளத்தில் விட்டார் ஷர்மா.
’ஆதார் கார்டு மூலம் பொதுத் தளத்தில் நான் என்ன விவரங்கள் அளித்திருக்கிறேனோ அது மட்டும் தான் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. உண்மையில் எந்தத் தகவலும் திருடப்படவில்லை’ என்று ட்விட்டரிலேயே ஹாக்கர்களுக்கு பதிலடி கொடுத்தார் ஷர்மா.
சில ஹாக்கர்கள் ஒருபடி மேலே சென்று ஷர்மாவின் வங்கி கணக்கில் 1 ரூபாய் பணத்தை டெபாசிட் செய்தனர். இன்னும் சிலரோ ஷர்மாவின் பெயரில் போலி ஆதார் கார்டையே உருவாக்கி ட்வீட் செய்தனர். அந்த ஆதார் கார்டை ஃபேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டதாக ஹாக்கர்கள் பதிவிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து ஆதார் அமைப்பு, ‘ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மிக பத்திரமாக இருக்கின்றன. ஷர்மா குறித்து வெளியான தகவல்கள் ஏற்கெனவே பொதுத் தளத்தில் கிடைப்பவைதான். அவர் பல ஆண்டு காலம் பொதுத் துறைகளில் சேவை செய்ததால், அவரது விபரங்கள் சுலபமாக கிடைக்கப் பெற்றன. ஆதார் எண் இல்லாமலும் அந்தத் தகவல்களை எடுக்க முடியும்’ என்று கூறியது.
இது ஒருபுறமிருக்க சைபர் துறை வல்லுநர்கள், ’ஆதார் தரவுகள் பத்திரமாக இருந்தாலும், ஒரு ஆதார் கார்டு எண்ணை வைத்து மற்ற நபர்களின் தனிப்பட்டத் தரவுகளை திருட வாய்ப்புள்ளது’ என்று கூறுகின்றனர்.