This Article is From May 07, 2019

“திமுக-வுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம்!”- அமமுக அதிரடி

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்றத் தொகுதிகளோடு சேர்த்து, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடந்தது.

“திமுக-வுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம்!”- அமமுக அதிரடி

சட்டமன்றத் இடைத் தேர்தலில் கணிசமான அளவு இடங்களை கைப்பற்றினால்தான் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்

“அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக-வுடன் இணையவும் தயார்” என்று தடாலடியான கருத்தை தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தங்க தமிழ்ச்செல்வன். 

இது குறித்து அவர் மேலும் விரிவாக பேசும்போது, “திமுக-வும் நாங்களும் சேர்ந்தால்தான் இந்த துரோக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினால்தான், அடுத்து பொதுத் தேர்தல் வரும். பொதுத் தேர்தலில் அமமுக, மெஜாரிட்டியில் ஜெயித்து, அம்மா ஆட்சியை தமிழகத்தில் அமைத்துவிடும். 

ஒருவேளை திமுக, அமமுக-விற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால், அவர்கள் பயப்படுகிறார்கள் என்றுதான் அர்த்தம். 22 இடைத் தேர்தலில் நாங்கள் மட்டுமே வெற்றி பெற்றாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு 34 எம்.எல்.ஏ-க்கள் பலம் வேண்டும். எங்களிடம் அது இல்லை. அப்படியென்றால், திமுகதான் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படி திமுக, எங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால், திமுக எங்களைப் பார்த்து அஞ்சுகிறது என்பது மட்டும்தான் அர்த்தம்” என்று அதிரடியாக பேசியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்றத் தொகுதிகளோடு சேர்த்து, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடந்தது. இதைத் தொடர்ந்து வரும் 19 ஆம் தேதி, 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியிடப்படும். சட்டமன்றத் இடைத் தேர்தலில் கணிசமான அளவு இடங்களை கைப்பற்றினால்தான் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். இல்லையென்றால் பெரும்பான்மை இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கவிழ வாய்ப்புள்ளது. 

இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில்தான், ‘திமுக-வுடன் கைகோர்க்க நாங்கள் ரெடி' என்று அமமுக பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுக தரப்பிலிருந்து இதுவரை இந்த கருத்துக்கு பதில் ஏதும் வரவில்லை. 

.