This Article is From Oct 18, 2019

ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா? எடப்பாடிக்கு சவால் விடுக்கும் ஸ்டாலின்!

சசிகலா காலில் தவழ்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராகி விட்டார். அதனால் தான் பாஜ தலைவர்களின் காலில் எடப்பாடி வீழ்ந்து கிடக்கிறார் என மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம். 

ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா? எடப்பாடிக்கு சவால் விடுக்கும் ஸ்டாலின்!

சசிகலா காலில் தவழ்ந்து முதல்வராகி விட்டார் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் ராஜினாமா செய்து விட்டு வரட்டும், ஒரே தொகுதியில் போட்டுயிடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடிக்கு சாவல் விடுத்துள்ளார். 

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருதகுளத்தில் நேற்று மாலை பிரசாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மத்தியில் நடக்கும் பாஜ ஆட்சிக்கு அடிமையாக நடந்து கொண்டிருக்கிறது. நான் அடிமை ஆட்சி என கூறுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்திரம் வந்துள்ளது. நாங்கள் மத்திய அரசுக்கு அடிமையல்ல என பதில் கூறியுள்ளார். அதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். 

ஆனால் அடிமை ஆட்சி என்பதற்கு எடுத்துக்காட்டாக பல உதாரணங்களை சொல்ல முடியும். அதில் ஒரே ஒரு உதாரணம் நீட் பிரச்னை. திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நீட் பிரச்னை வந்தது. ஆனால் கருணாநிதி அதை ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை சென்று தடையுத்தரவு பெற்றார். 

பின்னர் ஜெயலலிதாவும் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவர் சர்வாதிகாரியாக இருந்தாலும் கொள்ளையடிக்கும் ஆட்சி நடத்தினாலும் நீட் தேர்வை ஏற்க தயாராக இல்லை. எடப்பாடி முதல்வராக வந்த பின்னர் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்து விட்டது. அதனால் தான் தமிழகத்தில் அடிமை ஆட்சி நடக்கிறது என்கிறேன். 

தமிழகத்தின் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. டிஜிபி வீட்டில் ரெய்டு நடந்தது. அதை கேள்வி கேட்க எடப்பாடிக்கு துப்பு இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது கேள்வி கேட்க எடப்பாடியால் முடியவில்லை. ஏனெனில் கேள்வி கேட்டால் ஆட்சி பறிபோய் விடும். முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயிலுக்கு போய் விடுவார்கள். அதனால் தான் கேள்வி கேட்க முடியவில்லை. 

ஜெயலலிதா இறந்தவுடன் ஓபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் சட்டசபையில் அவர் என்னை பார்த்து சிரித்து விட்டார். உடனே அவரது பதவியை சசிகலா பறித்து விட்டார். அதற்கு பின்னர் சசிகலா தானே முதல்வராக தேதி குறித்து விட்டார். 4 நாட்கள் விட்டிருந்தால் சசிகலா முதல்வராகி இருப்பார். சுப்ரீம் கோர்ட் அவருக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து விட்டது. அப்போது சசிகலா காலில் தவழ்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராகி விட்டார். அதனால் தான் பாஜ தலைவர்களின் காலில் எடப்பாடி வீழ்ந்து கிடக்கிறார். 

எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும். ஒரே தொகுதியில் இருவரும் நிற்போம். போட்டியிட்டு பார்ப்போம் என்று அவர் சவால் விடுத்துள்ளார். 
 

.