சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஒரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சல்மானுக்கு டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை அவர் டெல்லிக்கு வந்தார். பாகிஸ்தானில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சல்மான், தெற்காசிய பகுதியில் அமைதியை நிலை நிறுத்துவதில் பாகிஸ்தான் நல்ல முயற்சி எடுத்துவருவதாக பாராட்டு தெரிவித்தார்.
காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில் சல்மானின் பாராட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகிறது. அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் கூறியதாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டெல்லி வந்த சல்மானை வழக்கமான மரபுகளை மீறி பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, சவுதி இளவரசர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. பேச்சுவார்த்தை முடிவில் இரு நாடுகளுக்கு இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுற்றுலா, உள்கட்டமைப்பு, வீட்டு வசதி, தகவல் ஒலிபரப்பில் ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சவுதி அரேபிய இளவரசர் சல்மான், தீவிரவாதம் அனைத்து நாடுகளுக்கும் கவலை அளிக்கும் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. தீவிரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவுடன் உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ள தயார். எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக, இந்தியா மற்றும் அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட சவுதி அரேபியா தயாராக இருக்கிறது என்று அவர் கூறினார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, எந்த விதத்திலும் தீவிரவாதத்தற்கு ஆதரவு அளிக்க கூடாது என்பதை தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு கடும் அழுத்தம் தர வேண்டும். தீவிரவாத கட்டமைப்பை முடிவுக்கு கொண்டு வர தீவிரவாத குழுக்களுக்கு தண்டனை அளிக்க வேண்டியதும் அவசியம். இந்த பிரச்சனையில் இந்தியாவுக்கு உதவ சவுதி அரேபியா ஒப்புதல் அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார்.