This Article is From Feb 06, 2019

ரஜினி - திருமா - திருநாவுக்கரசர் சந்திப்பு… பின்னணி என்ன? #Exclusive

சந்திப்பில் ஈடுபட்ட மூவர் தரப்பிலிருந்தும் எந்த வித விளக்கமும் இந்த நிமிடம் வரை வராததால், தமிழக அரசியல் களத்தின் பேசு பொருளாக இது மாறியுள்ளது. 

ரஜினி - திருமா - திருநாவுக்கரசர் சந்திப்பு… பின்னணி என்ன? #Exclusive

இது அரசியல் நிமித்தமான சந்திப்பா அல்லது, எதேச்சையாக நடந்த சந்திப்பா என்று சரிவர தெரியாததால், அரசியல் தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • திருநாவுக்கரசர்,சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
  • திருமாவளவன், ரஜினி அரசியலுக்கு ஆரம்பத்தில் வரவேற்பு கொடுத்தார்
  • ரஜினியும் திருநாவுக்கரசரும் நீண்ட நாள் நண்பர்கள்

நடிகர் ரஜினிகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ஆகிய மூவரும் இன்று சந்தித்துள்ளனர். இது அரசியல் நிமித்தமான சந்திப்பா அல்லது, எதேச்சையாக நடந்த சந்திப்பா என்று சரிவர தெரியாததால், அரசியல் தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த சந்திப்பு குறித்து தகவலறிந்தவர்களிடம் விசாரித்தபோது, ‘ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவின் மறுமணம் விரைவில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான பத்திரிகையைக் கொடுப்பதற்காக, தனது நீண்ட நாள் நண்பரான திருநாவுக்கரசர் வீட்டுக்குச் சென்றுள்ளார் ரஜினி. அப்போது, திருமாவளவனும் அங்கு இருந்துள்ளார். இதையடுத்துதான், மூவரும் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்தப் படம்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது' கூறி முடித்தனர். 

இந்தத் தகவலை வைத்துப் பார்க்கும்போது, இது எதேச்சையான சந்திப்பு போல தெரிந்தாலும், திருநாவுக்கரசர் வகித்த வந்த காங்கிரஸ் தலைவர் பதவி சமீபத்தில்தான் பறிக்கப்பட்டது. திருமாவளவனும், திமுக-வுடன் நட்புறவோடு இருந்து வந்தாலும், யாருடைய கூட்டணியிலும் இல்லை. மேலும், இன்னும் ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வரவுள்ளது. அதை வைத்துப் பார்க்கும்போது, இது ரஜினியின் அடுத்த அரசியல் மூவுக்கான சந்திப்பாகக் கூடு இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ரஜினியை, திருநாவுக்கரசன் அங்கு சென்று பார்த்ததாகவும் அதனால்தான் அவரது பதவி பறிக்கப்பட்டது என்றும் ஒரு தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்டபோது திருநாவுக்கரசர், ‘ரஜினி எனது 40 ஆண்டுகால நண்பர். அவரைச் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், நான் யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. ரஜினி, அமெரிக்காவிலிருந்த போது, நான் அங்கு சென்றது உண்மைதான். ஆனால், நான் சென்றது எனது பிள்ளைகளைப் பார்த்து வர மட்டுமே தவிர, அவரைப் பார்க்க அல்ல' என்று விளக்கம் அளித்தார். 

சென்ற ஆண்டு தொடக்கத்தில் ரஜினிகாந்த், 'வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி' என்று முழக்கமிட்டவுடன், அதை வரவேற்ற முக்கிய அரசியல் புள்ளிகளில் திருமாவளவனும் ஒருவர். ரஜினி அரசியல் என்ட்ரி குறித்து தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவியபோது, 'கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்பும் ஆற்றல் ரஜினிக்கு உள்ளது' என்று பகிரங்கமாக அறிவித்தார் திருமா. 

இப்படிப்பட்ட கருத்துகளால், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் திருமாவளவனும் ஐக்கியமாவார் என்றே பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி தொடர்ந்து பாஜக-வுக்கு ஆதரவாக கருத்து கூறி வந்தார். இது திருமாவை எரிச்சலடைய வைத்தது. அதைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட திருமாவளவன், ரஜினிக்கு எதிராக களமாட ஆரம்பித்தார். 

சந்திப்பில் ஈடுபட்ட மூவர் தரப்பிலிருந்தும் எந்த வித விளக்கமும் இந்த நிமிடம் வரை வராததால், தமிழக அரசியல் களத்தின் பேசு பொருளாக இது மாறியுள்ளது. 

.