This Article is From Oct 25, 2019

மாமல்லபுரத்தில் 2 நாட்கள் மோடி தங்கியதால் தான் அதிமுக வெற்றி பெற்றது: இல.கணேசன்

மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் மோடி தங்கியதால் தான் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

மாமல்லபுரத்தில் 2 நாட்கள் மோடி தங்கியதால் தான் அதிமுக வெற்றி பெற்றது: இல.கணேசன்

வரும் காலம் தமிழகத்தில் பாஜக-வின் காலம் தான் - பொன்.ராதாகிருஷ்ணன்

மாமல்லபுரத்தில் 2 நாட்கள் மோடி தங்கியதால் தான் அதிமுக வெற்றி பெற்றது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில், ஆரம்பம் முதலே இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் இருந்து வந்தது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் கிட்டத்தட்ட 44ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

தொடர்ந்து, நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் காங்கிரஸ் வேட்பாளரை விட 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக வெற்றி பெற பாஜகவின் பங்களிப்பு முக்கிய காரணம். இதேபோன்று வரும் காலம் தமிழகத்தில் பாஜக-வின் காலம் தான் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழக மக்கள் பாஜகவை எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

இதேபோல் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறும்போது, மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் மோடி தங்கியதால் தான் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாக தெரிவித்தார். 

.