This Article is From Jan 31, 2020

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ் சோதனைக்கான காரணம் என்ன?

செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று இந்த சோதனை நடைபெற்றது.

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ் சோதனைக்கான காரணம் என்ன?

2011-ம்‌ ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜியின் இல்லம், அவரது தம்பியின் இல்லம் மற்றும் நிறுவனங்களில் சென்னை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதிமுக ஆட்சியில் 2011-ம்‌ ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அதிமுகவில் இருந்து விலகிய அவர், தற்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராகவும் அரவக்குறிச்சி எம்எல்ஏவாகவும் உள்ளார்.

இந்நிலையில், 2017-ம் ஆண்டு செந்தில்பாலாஜி, தினகரன் அணியில் இருந்த போது சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், “செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 16 பேரிடம் ரூ.95 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக” தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று உள்ளார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று இந்த சோதனை நடைபெற்றது.

இதனிடையே, சோதனை நடைபெறும் தகவல் கசிந்ததையடுத்து. ராமேஸ்வரபட்டி இல்லத்தின் முன்பு திமுகவினர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. மேலும், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி ‌தம்பி அசோக்குக்கு சொந்தமான நிறுவனத்தில் போலீஸார் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

.