Read in English
This Article is From May 17, 2020

மே 31 வரை நீட்டிக்கப்படுகிறது லாக்டவுன்! பாதிப்பு மண்டலங்களை மாநில அரசுகள் தீர்மானிக்கலாம்!!

குறிப்பிடத்தக்க மாற்றங்களாக, சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களை மாநில அரசே தீர்மானிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Posted by

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு முடக்க (LOCKDOWN) நடவடிக்கையானது தற்போது சில மாற்றங்களுடன் இம்மாதம் 31 வரை நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி, முழு முடக்க  நடவடிக்கை நீட்டிக்கப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • குறிப்பிடத்தக்க மாற்றங்களாக, சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களை மாநில அரசே தீர்மானிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் மாநில அரசுகள் சுயமாக முடிவுகளை மேற்கொள்ளலாம். இந்த கோரிக்கைகள் முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி முதல்வர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் போது மாநில அரசுகளால் முன்வைக்கப்பட்டன. 
  • பகல் நேரங்களில் மக்களின் நடமாட்டத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. 
  • சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி மாநில அரசுகள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு பகுதிகளில் கட்டுப்பாட்டு மண்டலங்களை வரையறுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • மாநில அரசுகளில் ஒப்புதலுக்கு இணங்க மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்தினை மாநிலங்கள் தொடங்கலாம்.
  • தொற்று அதிகமாக உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்க அனுமதி கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • அதே போல, உடற்பயிற்சி கூடங்கள், பார்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள், கலையரங்குகள் போன்றவை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உள்ளூர் சுகாதார அதிகாரிகள், திறக்கப்பட்டிருக்கும் சந்தைகளில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  • விளையாட்டு அரங்குகள் பார்வையாளர்கள் இன்றி திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளன.
  • அதே போல, சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத செயல்பாடுகள், பிற கூட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
  • அனைத்து மத வழிப்பாட்டு தளங்களிலும் பொது வழிப்பாட்டிற்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
  • மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த விமான மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்துகளுக்கு தடை இம்மாத 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 90,927 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 2,872  பேர் உயிரிழந்துள்ளனர். 34,000  பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement