This Article is From Jul 03, 2018

காவிரி நீரை தமிழகத்துக்குத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு!

காவிரி மேலாண்மை வாரியம், தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா, தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

காவிரி நீரை தமிழகத்துக்குத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு!

ஹைலைட்ஸ்

  • காவிரி தொடர்பான வழக்கில் மே 19-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது
  • ஜூன் 1-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது
  • காவிரி தொடர்பாக மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளது கர்நாடகா

காவிரி மேலாண்மை வாரியம், தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா, தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் காவிரி நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் கடந்த பல வருடங்களாக பிரச்னை நிலவி வந்தது. இதில் கர்நாடகா, காவிரி ஆற்றில் அணைகள் கட்டி, மற்ற மாநிலங்களுக்குத் தேவையான நீரை திறந்து விடாமல் வஞ்சித்து வந்தது. இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இந்த வழக்கில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், `மத்திய அரசு, நான்கு மாநிலங்களுக்கு மத்தியில் நிலவி வரும் நீர் பங்கீட்டுப் பிரச்னையைத் தீர்க்க உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன்னர் வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று கூறி காவிரி பங்கீடு தொடர்பான வழக்கை முடித்து வைத்தது.

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது. தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தலைவராக மசூத் உசேனை நியமித்தது மத்திய அரசு. மேலும், நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளின் பெயரையும் கேட்டது. அனைத்து விவகாரங்களு முறையே செய்யப்பட்ட பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதையடுத்து கர்நாடகா, தமிழகத்துக்கு ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது மேலாண்மை வாரியம்.

இந்த முடிவு குறித்து மசூத் உசேன், ‘ஜூலை மாதத்துக்குக் குறிப்பிடப்பட்டுள்ள நீரின் அளவை கர்நாடகா, சரியான முறையில் தமிழகத்துக்குத் திறந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்’ என்று தெரவித்தார்.

இது ஒருபுறமிருக்க, கடந்த ஜூன் 30 ஆம் தேதி, கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், காவிரி மேலாண்மை அமைத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. 



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.