This Article is From Feb 13, 2020

7 பேர் விடுதலை: ஆளுநர் தாமதிப்பதால் எதையும் சாதிக்க முடியாது: ராமதாஸ்

ஆளுநர் நினைத்திருந்தால் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சமாக ஒரு மாதத்திலோ முடிவு எடுத்திருக்க முடியும். அதேநேரத்தில் 7 தமிழர்கள் விடுதலை குறித்த பரிந்துரை மீது 522 நாட்களைக் கடந்தும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை.

Advertisement
தமிழ்நாடு Edited by

ஆளுநர் நினைத்திருந்தால் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சமாக ஒரு மாதத்திலோ முடிவு எடுத்திருக்க முடியும் - ராமதாஸ்

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் தாமதிப்பதன் மூலம் ஆளுநர் எதையும் சாதிக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு நேற்றைய தினம்  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வுக்கு முன் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்கள் அல்ல என தெரிவித்தார்.

7 பேர் விடுதலை குறித்த கோப்பு ஆளுநர் முன்பு ஏன் இத்தனை மாதம் நிலுவையில் உள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், "பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், மகிழ்ச்சியான முடிவை நோக்கிப் பயணிப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. 29 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் காலவரையின்றி சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்க முடியாது என்பது தான் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள உணர்வாகும்.

7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என ஆளுநரை நோக்கி நேரடியாகவே நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்க முடியும். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சில விஷயங்களில் ஆளுநருக்கு உத்தரவிடுவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால்தான், ஆளுநரிடமிருந்து தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடைகளை, தமிழக அரசிடம் மூலம் கேட்டு அறிய விரும்புவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Advertisement

அதேநேரத்தில் ஆளுநருக்கு மற்றொரு உண்மையையும் நீதிபதிகள் உணர்த்தியுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி தண்டனை குறைக்கும் பரிந்துரைகள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மைதான் என்றாலும், இதையே காரணம் காட்டி 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அழுத்தம் திருத்தமாக தமிழக அரசின் வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உணர்வை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புரிந்துகொள்ள வேண்டும்.

Advertisement

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில்தான் 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானம் செப்டம்பர் 9-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் நினைத்திருந்தால் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சமாக ஒரு மாதத்திலோ முடிவு எடுத்திருக்க முடியும்.

Advertisement

அதேநேரத்தில் 7 தமிழர்கள் விடுதலை குறித்த பரிந்துரை மீது 522 நாட்களைக் கடந்தும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை. இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் தாமதிப்பதன் மூலம் ஆளுநர் எதையும் சாதிக்க முடியாது. 

கடந்த காலங்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பலரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதம் செய்ததால், அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. தமிழக ஆளுநரின் காலவரையற்ற தாமதமும் அத்தகையதொரு சூழலுக்கு தான் அழைத்துச் செல்லும்.

Advertisement

எனவே, ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்யாமல் அரசியலமைப்புச் சட்டப்படியான அவரது கடமையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்படி ஆளுநருக்கு தமிழக அரசு நினைவூட்ட வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement