#ReleasePerarivalan - "தியாகராஜன் ஐபிஎஸ் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவு செய்யவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்த பின்னரும்"
#ReleasePerarivalan - முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரில் பேரறிவாளனும் ஒருவர். இதில் வழக்கை விசாரித்த தியாகராஜன் ஐபிஎஸ், ‘பேரறிவாளன் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவு செய்யவில்லை' என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.
பேரறிவாளன் கைதானதில் இருந்து இன்று வரை அவரது தாய் அற்புதம் அம்மாள், பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அதிகார மையத்தில் இருப்பவர்களைத் தொடர்ந்து சந்தித்து, தனது மகனை விடுதலை செய்யக்கோரி வருகிறார் அவர்.
சூழல் இப்படியிருக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, அதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு அனுப்பி வைத்தது. பல மாதங்களாக கோப்புகள் ஆளுநர் அலுவலகத்தில்தான் இருக்கின்றன. அது குறித்து அவர் இன்று வரை தனது முடிவைத் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில்தான், பேரறிவாளனுக்கு ஆதரவாக #ReleasePerarivalan என்கிற ஹேஷ்-டேக் டிரெண்டாகி வருகிறது.
“நோயுற்ற 78 வயது தந்தையை உடனிருந்து கவனிக்க, ஒரே மகனாக பெற்றோரின் இறுதி நாட்களிலாவது உடன் இருக்க,
தியாகராஜன் ஐபிஎஸ் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவு செய்யவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்த பின்னரும், விடுதலை கிடைக்காமல் சிறையில் வாடும் பேரறிவாளனின் விடுதலைக்கு உங்கள் குரலை உரத்து எழுப்புங்கள்!,” என்கின்ற வாசகங்கள் கொண்ட படத்துடன் #ReleasePerarivalan என்கிற ஹேஷ்-டேக் டிரெண்டாகி வருகிறது.