This Article is From Apr 08, 2020

''மதம் - மனிதர்களைப் பிரிக்கும் சுவர் அல்ல - மனிதநேயத்தை தழைக்க செய்யும் மலர்க்கொடி'' : வைகோ

மனிதநேயப் பண்பாளர் திரு சையது அபுதாகீர் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு இதயம் நிறைய வாழ்த்தினேன். திரு. சையது அபுதாகீர் போன்ற மனிதாபிமானச் சிற்பிகளால் மனிதநேயம் தழைப்பது மட்டுமல்ல, அவர் பணியாற்றும் காவல்துறைக்கும் புகழ் மகுடமாகும் என்று வைகோ கூறியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Highlights

  • மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்
  • கர்ப்பிணிக்கு இரத்தம் வழங்கிய காவலர் அபுதாகிரை வைகோ பாராட்டியுள்ளார்
  • மதம் மனிதநேயத்தைத் தழைக்கச் செய்யும் மலர்க்கொடி என்று வைகோ கூறியுள்ளார்

“மதம் என்பது மனிதர்களைப் பிரிக்கும் சுவர் அல்ல - மனிதநேயத்தைத் தழைக்கச் செய்யும் மலர்க்கொடி” என்று மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது-

மணப்பாறை அருகே உள்ள இரட்டைப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரும், சுலோச்சனா எனும் அவரது நிறைமாத கர்பிணி மனைவியும் பிரசவம் பார்ப்பதற்காக மணப்பாறையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். கர்ப்பிணித் தாய்க்கு இரத்தம் செலுத்த வேண்டிய நிலை. ஆனால் அந்தப் பெண்ணின் இரத்த வகையைச் சேர்ந்த இரத்தம் அந்த மருத்துவமனையில் இல்லாததால், சிகிச்சை செய்ய முடியாமல் திரும்பினர். வேதனையில் நடந்துகொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியில் பணியில் இருந்த காவல்துறை இளைஞர், வளநாட்டைச் சேர்ந்த சையது அபுதாகிர் இந்தத் தம்பதியிடம், “என்ன என்ன வருத்தமாகச் செல்கிறீர்களே! காரணம் என்ன?” என்று கேட்டார். நிலைமையை விளக்கினர்.

அந்தக் கர்ப்பிணித் தாயின் இரத்த வகையும், தன் இரத்தமும் ஒரே வகைதான் என்பதை உணர்ந்த சையது அபுதாகீர் அவர்களை அழைத்துக்கொண்டு அதே மருத்துவமனைக்குச் சென்று இரத்தம் கொடுத்துள்ளார்.

Advertisement

சுகப்பிரசவம் ஆயிற்று. பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம்.

இந்தச் செய்தி அறிந்தபோது, என் உள்ளத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி. “மதம் என்பது மனிதர்களைப் பிரிக்கும் சுவர் அல்ல - மனிதநேயத்தைத் தழைக்கச் செய்யும் மலர்க்கொடி” என உளம் பூரித்தேன்.

Advertisement

மனிதநேயப் பண்பாளர் திரு சையது அபுதாகீர் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு இதயம் நிறைய வாழ்த்தினேன். திரு. சையது அபுதாகீர் போன்ற மனிதாபிமானச் சிற்பிகளால் மனிதநேயம் தழைப்பது மட்டுமல்ல, அவர் பணியாற்றும் காவல்துறைக்கும் புகழ் மகுடமாகும்.

அந்த இலட்சிய இளைஞர் வாழ்வாங்கு வாழ்க.

Advertisement

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


 

Advertisement