This Article is From Apr 30, 2020

‘ரிஷி கபூரை இப்படித்தான் நினைவுகூற வேண்டும்’- அவரின் குடும்பம் உருக்கமான அறிக்கை!

"இக்கட்டான காலக்கட்டத்தில் அவரைச் சந்தித்த அனைவரும், அவர் எப்படி நோயால் துவண்டு போகாமல் இருந்தார் என்பதைப் பார்த்து அசந்து போனார்கள்"

‘ரிஷி கபூரை இப்படித்தான் நினைவுகூற வேண்டும்’- அவரின் குடும்பம் உருக்கமான அறிக்கை!

"எங்களின் இந்த தனிப்பட்ட துயரத்தின்போது உலகமும் பெருந்துயரில் ஆட்பட்டு இருப்பதை உணர்கிறோம்"

ஹைலைட்ஸ்

  • 'குடும்பம், நண்பர்கள், உணவு மற்றும் சினிமாவே அவரின் எண்ணமாக இருந்தது'
  • 'அவரது ரசிகர்கள் கொடுத்த அன்பை பெரும் பேறாக எண்ணினார்'
  • 'வாழ்க்கையை முழுமையுடனும் எதார்த்தத்துடனும் வாழ முனைப்பாக இருந்தார்'
New Delhi:

முதுபெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் 67 வயதில் காலமானார். மும்பையில் வசித்து வந்த அவர் நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று பாலிவுட்டின் பிரபல நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவால் காலமானார். இப்படிப்பட்ட சூழலில் ரிஷி கபூரின் மறைவுச் செய்தி பாலிவுட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரிஷி கபூரின் மறைவைத் தொடர்ந்து பல பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

புற்று நோய்க்கு எதிராக போராடி வந்த ரிஷி கபூருக்கு நேற்று திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காலை அவரது குடும்பத்தினர், கபூரை மும்பையில் உள்ள எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டும், இன்று இயற்கை எய்தியுள்ளார். 

‘பாபி', ‘சாந்தினி' போன்ற பாலிவுட் படங்களுக்காக மிகவும் பிரபலமானவர் ரிஷி கபூர். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ரிஷி கபூருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அவர் சிகிச்சை முடிந்து மும்பைக்குத் திரும்பினார். இந்தியா வந்த பிறகு அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன்! 11 மாதங்கள், 11 நாட்கள்! எல்லோருக்கும் நன்றி,” எனத் தெரிவித்திருந்தார். 

கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் ரிஷி கபூர் உடல்நலக் குறைவால் இரண்டு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லியில் ஒரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகு கபூர், “பிரியமுள்ள குடும்பமே, நண்பர்களே, எதிரிகளே மற்றும் பின் தொடர்பவர்களே. என் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கவலைப்பட்டது நெகிழ்ச்சியளிக்கிறது. நன்றி. கடந்த 18 நாட்களாக நான் டெல்லியில் ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தேன். இங்குள்ள கடும் மாசுவினால் எனக்குத் தொற்று ஏற்பட்டது. அதனால்தான் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்,” என்று தகவல் கொடுத்தார். 

ரிஷி கபூர் மறைவை அடுத்து அவரது குடும்பம் வெளியிட்ட அறிக்கை:

“எங்களின் பிரியமுள்ள ரிஷி கபூர், இரண்டு ஆண்டுகளாக லுக்கிமியா நோய்க்கு எதிராக போராடி வந்த நிலையில், இன்று காலை 8:45 மணிக்கு அமைதியான முறையில் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் கடைசி வரை தங்களை அவர், நகை உணர்வோடு வைத்திருந்ததாக தெரிவித்தனர்.

இந்த இரண்டு ஆண்டுகளிலும் வாழ்க்கையை முழுமையுடனும் எதார்த்தத்துடனும் வாழ வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். குடும்பம், நண்பர்கள், உணவு மற்றும் சினிமா உள்ளிட்டவையே அவரின் எண்ணமாக இருந்தது. இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் அவரைச் சந்தித்த அனைவரும், அவர் எப்படி நோயால் துவண்டு போகாமல் இருந்தார் என்பதைப் பார்த்து அசந்து போனார்கள்.

உலகின் பல இடங்களிலிருந்தும் அவருக்கும் அவரது ரசிகர்கள் கொடுத்த அன்பை பெரும் பேறாக எண்ணினார். மறைவிலும், அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரை நினைவுகூற வேண்டுமே நினைப்பாரே தவிர, துக்கத்துடன் துவல வேண்டும் என்று கருத மாட்டார். 

எங்களின் இந்த தனிப்பட்ட துயரத்தின்போது உலகமும் பெருந்துயரில் ஆட்பட்டு இருப்பதை உணர்கிறோம். பொது இடங்களில் கூடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே அவரின் ரசிகர்கள், நெருக்கமானவர்கள், குடும்ப நண்பர்கள் உள்ளிட்டவர்கள் சட்ட நடைமுறைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.”


 

.