Chennai:
சென்னை: ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் நில ஆக்கிரமிப்பாளர்கள் சோலார் வேலிகள் அமைத்ததை தடுக்காத பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினரை கடுமையாக கண்டித்தது மட்டுமின்றி, உடனே அந்த வேலிகளை அகற்றிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இனி வருங்காலத்தில் முற்றிலும் தடுத்திடவும் வேண்டி T.முருகவேல் என்பவர் தொடுத்த பொது நல வழக்கின் தொடர்ச்சியாக, நீதிபதிகள் சத்யநாரணயணன் மற்றும் இளந்திரையான் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
1967ஆம் ஆண்டில் மாநில விவசாயத்துறையால், ஈரோடு மட்டும் கோவை மாவட்டங்களில் உள்ள நிலமற்ற மக்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பவானி சாகர் அணையின் நீர்பரப்பு நிலங்கள் குத்தகைக்கு அளிக்கப்பட்டது. ஆயினும், 1980ஆம் ஆண்டில் ‘வன பாதுகாப்பு சட்டம்’ அமலாக்கப்பட்ட பின் வனப்பகுதிகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. ஆனால், இன்றளவிலும் சட்டத்திற்கு புறம்பான முறையில் வனப்பகுதி நிலங்களில் ஆக்கிரமிப்புகள் நடந்து வருகிறது என கூறியுள்ளார் மனுதாரர் T.முருகவேல்.
ஒரு காலத்தில் இந்த நிலங்கள் ஏழை விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலும், இன்று அங்கே பயிரிடுவோர் எல்லாம் பணக்கார விவசாயிகளும் மாஃபியாக்களுமே என்கிறார் முருகவேல். காட்டு மிருகங்கள் நடமாட்டத்தை தடுக்க இவர்கள் சோலார் வேலிகளை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
மொத்த வழக்கின் அறிக்கையையும் படித்த நீதிபதிகள், “பொதுப்பணித்துறையும் வனத்துறையும் நம் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையே இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. நம்மை சுற்றி நடக்கும் சுற்றுச்சூழல் பேரழிவை நாம் கண்காணிக்க வேண்டிய உடனடி தேவை ஏற்பட்டுள்ளது” என தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும், சோலார் வேலி அமைக்கப்பட்டுள்ளது வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக மட்டுமே என சில விவசாயிகள் சார்பாக ஒரு மூத்த சட்ட ஆலோசகர் முன்வைத்த வாதங்களையும் நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
சோலார் வேலிகளை உடனடியாக அகற்றும்படியும், தேவைப்பட்டால் ஈரோடு மாவட்ட காவல் துறை மேலாதிகாரிகளின் உதவிகளை பெறலாம் எனவும் வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றை உடனே செய்து முடிக்கும்படியும் இந்த வழக்கின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை பின்தொடரும்படியும் ஈரோடு மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்பரிண்டண்ட் மற்றும் வருவாய் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்யும்படி, பொதுப்பணித்துறைக்கு சொல்லப்பட்டுள்ளது.