தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் என் பெயர் விடுபட்டிருந்தது. அதனாலேயே விலகினேன், ரேனு ஜோகி
Bilaspur: சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மனைவி ரேனு ஜோகி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் மேலும் அஜித் ஜோகி புதிதாக தொடங்கியுள்ள ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியிலிருந்து போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ரேனு தனது முடிவு குறித்து பேசுகையில், ‘காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. நான் கட்சிக்காக அயராது உழைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக எனக்கு கட்சியில் சரியான மதிப்பு தரப்படவில்லை.
இந்நிலையில், தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் என் பெயர் விடுபட்டிருந்தது. என்னை அவமதிக்கும் செயலாகவே இதைப் பார்க்கிறேன். அதனாலேயே நான் காங்கிரஸிலிருந்து விலகியுள்ளேன்' என்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தொடர்ந்து, ‘காங்கிரஸிலிருந்து தற்போது விலிகியிருந்தாலும், லோக்சபா தேர்தலில் பாஜக-வுக்கு எதிரான கூட்டணியில் நாங்கள் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது' என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். ஏனென்றால், அஜித் ஜோகி இதுவரை காங்கிரஸுடனான கூட்டணி குறித்து எங்கும் பேசவில்லை.
அஜித் ஜோகி, இந்த முறை பகுஜன் சமாஜ் மற்றும் சிபிஐ கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.