This Article is From Jan 31, 2019

‘வேலைவாய்ப்பின்மை அறிக்கை’ இன்னும் சரிபார்க்கப்படவில்லை: நீத்தி அயோக்

இந்திய அளவில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கையின் தகவல் இன்று பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது

தற்போது வெளியாகியிருக்கும் இந்தத் தகவலால் பெரும் சலசலப்பு உண்டாகியுள்ளது.

New Delhi:

இந்திய அளவில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கையின் தகவல் இன்று பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த அறிக்கை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்று நீத்தி அயோக் கூறியுள்ளது. 

நாட்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து கடந்த 2017-18-ல் 6.1 சதவிகிதமாக உள்ளது. இந்த தகவலை தேசிய கருத்துக்கணிப்பு அலுவலகம் தெரிவிக்கவிருந்ததாகவும், அது தற்போது ‘பிசினஸ் ஸ்டாண்டர்டு' செய்தித்தாள் லீக் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு கடந்த டிசம்பர் மாதமே தேசிய புள்ளியியல் ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இருப்பினும், இந்தத் தகவலை வெளியிட தாமதம் ஆகியிருப்பதாக கூறி தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் உள்பட 2 உறுப்பினர்கள் தங்களது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். 

தற்போது வெளியாகியிருக்கும் இந்தத் தகவலால் பெரும் சலசலப்பு உண்டாகியுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மோடி, ஓராண்டுக்கு 2 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று நம்மிடம் சத்தியம் செய்தார். ஆனால், 5 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள அறிக்கை, ஒரு தேசியப் பேரிடர் குறித்து தெரியப்படுத்தியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 2017-18 ஆண்டில் மட்டும் 6.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். மோடியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது' என்று பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் நீத்தி அயோக் அமைப்பின் துணைத் தலைவர், ‘தற்போது லீக் ஆகியிருக்கும் அறிக்கை இன்னும் சோதிக்கப்படவில்லை. அதன் உண்மைத்தன்மை குறித்து தற்போது கூற முடியாது' என்று கூறியுள்ளார். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது லீக் ஆகியிருக்கும் அறிக்கை மிகவும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

.