ஹைலைட்ஸ்
- டெல்லியின் ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடக்கிறது
- சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்கா அதிபர் கலந்து கொண்டுள்ளார்
- பெண்கள் படை இந்த முறை பரேடுக்கு தலைமை வகித்தது
New Delhi: 70வது குடியரசு தினத்திற்கான நிகழ்ச்சிகள், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புப் படை மற்றும் கலை நிகழ்ச்சிகள் அடங்கிய அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமஃபோஸோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். 90 நிமிடங்களுக்கு நடக்கும் இந்த அணிவகுப்பில் பாதுகாப்புப் படையினரின் பரேட், கலை நிகழ்ச்சிகள் உட்பட வெகு சிறப்பான கொண்டாட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
முக்கிய 10 தகவல்கள்:
1. குடியரசு தினத்தையொட்டி, நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதால்தான், நம் தேசம் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறது' என்றார். அவர் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை வரவேற்றுப் பேசினார். அது மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்குதற்கான படி என்றும் ஜனாதிபதி கூறினார்.
2. சிறப்பு விருந்தினர் தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமஃபோஸா, தனது மனைவி மற்றும் 9 அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதிபராக பதவியேற்ற பிறகு ராமஃபோஸா இப்போதுதான் முதல் முறையாக இந்தியா வருகை புரிந்துள்ளார். 2 நாட்களுக்கு அவர் அரசு முறை சுற்றுப் பயணத்தில் இருப்பார்.
3. ராஜ்பாத்தில் நடக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் அசாம் பெண்கள் துப்பாக்கிப் படையைச் சேர்ந்த வீராங்கனைகள், முதலாவதாக அணிவகுப்பை ஆரம்பிப்பர். அந்தப் படையைச் சேர்ந்த பெண் அதிகாரி, இரு சக்கர வாகன ஸ்டன்ட் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
4. 90 வயதைத் தாண்டிய நான்கு முன்னாள் இந்திய ராணுவப் படை வீரர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இந்த ஆண்டு 150வது காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. அவருக்கும் தென் ஆப்ரிக்காவுக்கும் ஒரு தவிர்க்க முடியாத பிணைப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
6. தென் ஆப்ரிக்காவில், ரயிலில் இருந்து காந்தி தூக்கியெறியப்பட்டச் சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில், அணிவகுப்பில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த சம்பவம்தான், காந்தியை ‘சத்தியாகிரகம்' செய்ய தூண்டியது.
7. 1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன்வாலா படுகொலை சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
8. ஜெயிஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்பட்டு இருவரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. வியாழக் கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
9. அணிவகுப்பு நடக்கும் இடத்தில் 400 மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறித்து பேசியுள்ள டெல்லி போலீஸ் பிஆர்ஓ மதூர் வர்மா, “குற்றப் பின்னணி இருக்கும் யாராவது அணிவகுப்புக்கு வரப் பார்த்தார்கள் என்றால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10. குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி, டெல்லி மெட்ரோ ரயிலின் சேவையின் ஒரு பகுதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.