This Article is From Aug 29, 2019

Rajiv Gandhi: 7 பேரை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய நளினியின் வழக்கு தள்ளுபடி!

ஏழு பேரை விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Rajiv Gandhi: 7 பேரை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய நளினியின் வழக்கு தள்ளுபடி!

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபட்பாயஸ், ஜெயக்குமார் உள்பட 7 பேர் ஆயுள் கைதிகளாக உள்ளனர். அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி இருந்தது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் 7 பேர் விடுதலை தொடர்பாக இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள தான் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு நளினி மனு அனுப்பினார்.

ஆனால் தமிழக அரசு தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், எங்கள் 7 பேரையும் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் சி.சரவணன் அமர்வில் கடந்த 20-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டறிய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் பதில் வாதத்தில், முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனவும் அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது எனவும் தெரிவித்திருந்தது.

அதே போல, இந்திய அரசியலமைப்பு சட்டம் 361படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது. ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதாகவும், 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரீசிலனையில் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இந்நிலையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் ஏழு பேரை விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

.