This Article is From Jul 10, 2018

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 இளம் வீரர்கள் பாதுகாப்பாக மீட்பு

அமெரிக்கா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், வீரர்களை மீட்க உதவ கூடிய சிறிய சப்-மெரைனை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 இளம் வீரர்கள் பாதுகாப்பாக மீட்பு

ஹைலைட்ஸ்

  • தாய்லாந்து குகையில் சிக்கிய 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
  • மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
  • இரண்டு வாரங்களுக்கு மேல் குகையில் சிக்கி இருந்தனர்
Mae Sai, Thailand:

தாய்லாந்து: தாய்லாந்து வைல்டு போயர்ஸ் அணியை சேர்ந்த 12 வீரர்களும், பயிற்சியாளரும் மீட்கப்பட்டுள்ளனர்

செவ்வாய்கிழமை நடைப்பெற்ற மூன்றாவது நாள் மீட்பு பணியின் முடிவில், குகையில் சிக்கி இருந்த 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ’12 வைல்டு போயர்ஸ்களும் குகையில் இருந்து மீட்பு” என்று தாய் கடற்படை முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது

கடந்த ஜூன் 23 ஆம் தேதி அன்று, கால்பந்து பயிற்சிக்கு பிறகு 12 இளம் கால்பந்து வீரர்களும், பயிற்சியாளரும் குகைக்குள் சிக்கி கொண்டனர். பலத்த மழை பெய்த காரணத்தால், குகைக்குள் நீர் அதிகரித்தது.

உலகையே உலுக்கிய செய்தியை கண்டு, வெளிநாட்டு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், மீட்பு பணிகள் தாமதமாகின.

கடந்த ஞாயிற்று கிழமை அன்று, குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்தன. மூன்று நாட்களாக தொடர்ந்து நடைப்பெற்று வந்த மீட்பு பணியின் முதல் நாள் நான்கு பேரும், இரண்டாம் நாள் நான்கு பேரும் குகையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர். மூன்றாவது நாள் மீட்பு பணியில், மீதம் இருந்த ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.

அமெரிக்கா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், வீரர்களை மீட்க உதவ கூடிய சிறிய சப்-மெரைனை தாய்லாந்து மீட்பு குழுவினருக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு நாட்களில் மீட்கப்பட்ட எட்டு சிறுவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், இரண்டு பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தாய்லாந்து கடற்படையை சேர்ந்த பணியாளர் ஒருவர், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள 12 வீரர்களும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இரண்டு வாரங்களுக்கு மேல் குகைக்குள் இருந்ததால், தொற்று நோய்கள் தாக்கியுள்ளதா என வீரர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.