மராத்தா சமூதாயத்தினர் கல்வி மற்றும் சமூதாயத்தில் பின்தங்கிய வகுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Mumbai: மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த 16 சதவீத இட ஒதுக்கீடானது உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மேலானது ஆகும்.
மகாராஷ்டிராவில் தற்போது 52 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில், மராத்தா சமூதாயத்தினர் இட ஒதுக்கீடை சேர்த்து இனி 68 சதவீதமாக இருக்கும்.
மகாராஷ்டிரா மாநில மக்கள் தொகையில் 30 சதவீதத்தை கொண்டவர்களும், அரசியலில் செல்வாக்கு கொண்டவர்கள் மராத்தா சமூதாயத்தினர். மராத்தா சமூதாயத்தினரின் நீண்டகாலக் கோரிக்கை காரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் பின்தங்கிய வகுப்பினராக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூதாயத்தினர் நடத்திய போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதைத்தொடர்ந்தே தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொண்டது.
தங்கள் சமூதாயத்தினருக்கு அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை என்றும், இட ஒதுக்கீடு காரணமாக தாழ்த்தப்பட்டோர் பிரிவினர் மற்றும் பழங்குடியின பிரிவினர் உள்ளிட்டோர் தற்போது நல்ல நிலையில் உள்ளனர் என மராத்தா சமூதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. அதற்கான தீ்ர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.