NEW DELHI: மத்திய அரசு பணிகளில், பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அவசியம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. ஆயிரம் ஆண்டுகளாக எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை கருத்தில் கொண்டு, அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆகையால், அரசு பணியில், எஸ்.சி, எஸ்.டி பிரிவினரின் பதவி உயர்வுக்கு 22.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் நீதிமன்றத்தில் கூறினார்.
2006-ம் ஆண்டு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை நீதிமன்றம் விசாரித்தது. அதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், தகுந்த டேட்டா ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த டேட்டா தகவலில், இட ஒதுக்கீடு வழங்குவதற்கான போதிய காரணம் நிரூபிக்கப்பட வேண்டும் என்றது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தங்களுக்கு பாதிப்பு எற்படும் என்று எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். மேலும் இது எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மீது சுமத்தப்படும் பாகுபாட்டை காட்டுகிறது என்று கூறினர்.
அரசியல் ரீதியாக பலமாக இருக்கும் பல தலித் அமைப்புகளுக்கு பா.ஜ.க அரசுமேல் இருக்கும் கோபத்தை தணிக்கவே, மத்திய அரசு இந்த இட ஒதுக்கீட்டுக்கு இப்போது ஆதரவாக வாதாடி வருகிறது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்த வேணுகோபால், “உச்ச நீதிமன்றம் கேட்ட டேட்டாவை தருவதில் சிக்கல்கள் உள்ளன. சரியான டேட்டாவை எடுக்கவும் முடியாது. ஏனெனில், டேட்டா மாறிக் கொண்டே இருக்கும். அதே நேரம் வேலைக்கு ஊழியர்களை நியமித்தலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்" என்று கூறினார்.
2006-ம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை இப்போது விசாரித்து வருகிறது உச்ச நீதிமன்றம். அந்த வழக்குகளை தனித்தனியாக விசாரிக்கவா அல்லது 7 பேர் கொண்ட பெரிய அமர்வு விசாரிக்கவா என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு 7 பேர் கொண்ட அமைப்பே வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16-ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்.