தன் யூடியூப் சேனலில் தினமும் பிரசங்க காணொலிகளைப் பதிவேற்றி வருகிறார்.
ஹைலைட்ஸ்
- 'கைலாசா' எனும் புதிய நாட்டை உருவாக்க உள்ளதாக கூறியிருந்தார் நித்தியானந்தா
- கைலாசா குறித்து தொடர்ந்து அப்டேட்களை அவர் வழங்கி வருகிறார்
- இந்நிலையில் 'ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா' குறித்து அறிவித்துள்ளார்
இந்தியாவில் ஆள் கடத்தல், பண மோசடி உள்ளிட்டப் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு நபராக இருந்து வரும் சாமியார் நித்தியானந்தா, அவர் உருவாக்க உள்ள கைலாசா என்னும் நாட்டிற்கு ‘ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா' என்னும் மத்திய வங்கியை அமைக்க உள்ளது குறித்து விரிவாக பேசியுள்ளார்.
கடந்த பல மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மாநில காவல் துறையினர், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் நித்தியானந்தா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றன. அதே நேரத்தில் அவரோ, தன் யூடியூப் சேனலில் தினமும் பிரசங்க காணொலிகளைப் பதிவேற்றி வருகிறார்.
ஒரு பக்கம் ஆன்மிகம் குறித்து சொற்பொழிவாற்றும் நித்தியானந்தா, அவ்வப்போது தான் உருவாக்க உள்ள கைலாசா நாடு குறித்தான அப்டேட்களை வழங்கி வருகிறார்.
அப்படித்தான் சமீபத்தில் ஒரு வீடியோவில் அவர், “கைலாசாவுக்கான மொத்தப் பொருளாதாரம், பொருளாதாரக் கொள்கைகளும் தயார். 300 பக்க ஆவணத்தை தயாரித்துள்ளோம். கைலாசாவுக்கான தனி பணம், அதற்கான கொள்கை, உள்ளூர் பணப் பரிமாற்றம், வெளிநாடுகளுடனான பணப் பரிமாற்றம் உள்ளிட்டவைகள் குறித்தான விதிமுறைகள் தயார். வாடிகன் வங்கியை உதாரணமாகக் கொண்டு கைலாசா ரிசர்வ் வங்கியை உருவாக்கியுள்ளோம். கரன்சி வடிவமைப்பு முதல் அனைத்தும் முடிந்துவிட்டன.
இது குறித்தான அனைத்து ஆவணங்களும் சட்டப்பூர்வமாக தயாரிக்கப்பட்டுவிட்டன. அதை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டன” என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
உலகமே கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்றால் அவதிப்பட்டு வருகிறது. இந்நிலையில் நித்தியானந்தாவிடம், தனி நாடு, தனி வங்கி உருவாக்கும் அளவுக்கு நிதி குவிந்திருப்பது, அவர் பேச்சுகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.