சென்னையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது சரியல்ல: ராமதாஸ் எச்சரிக்கை
ஹைலைட்ஸ்
- சென்னையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது சரியல்ல: ராமதாஸ்
- தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் சவாலாக அமையப் போகிறது.
- சென்னையில் கொத்து கொத்தாக கொரோனா பரவல் ஏற்பட்டது
சென்னையில் நோய்ப் பரவலைத் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய சூழலில், இருக்கும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டிருப்பது சரியல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,000ஐ கடந்துள்ளது. நேற்று மட்டும் புதியதாக 266 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 203 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, "தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்த 40 நாட்களாக நடைமுறையில் இருந்து வந்த முதல் இருகட்ட ஊரடங்கு நிறைவடைந்து, தளர்வுகளுடன் கூடிய மூன்றாவது ஊரடங்கு இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.
இது கொரோனா பரவலுக்குச் சாதகமாகவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பாதகமாகவும் இருக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருப்பது அவசியமாகிறது. தமிழ்நாட்டில் முதல் இரு கட்ட ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்றைய நிலவரப்படி சென்னையில் 1,458 பேர், தமிழகத்தின் பிற பகுதிகளில் 1,565 பேர் என ஒட்டுமொத்தமாக 3,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 107 மட்டும்தான் குறைவு. அதாவது 6.83% மட்டும்தான் குறைவு. ஒட்டுமொத்த தமிழகமும், சென்னையும் ஒன்றுதான் என்று கூறும் அளவுக்கு சென்னையில் கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் உச்சத்தை அடைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக அதிகாரப்பூர்வமாக 200க்கும் மேற்பட்டோரும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் இன்னும் பல மடங்கு கூடுதலானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் நோய்ப் பரவலைத் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய சூழலில், இருக்கும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டிருப்பது சரியல்ல. இத்தகைய சூழலில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கொரோனாபரவலைக் கட்டுப்படுத்துவது தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் சவாலாக அமையப் போகிறது.
ஊரடங்கும், முழு ஊரடங்கும் இருந்த காலத்தில்தான் சென்னையில் கொத்து கொத்தாக கொரோனாபரவல் ஏற்பட்டது. இப்போதும் கூட ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு கொரோனா, ஒரே தெருவில் 54 பேருக்கு கொரோனா என்று செய்திகள் வெளியாகிவரும் நிலையில், ஊரடங்கு தளர்வு காலத்திலும் நோய்ப்பரவாமல் தடுப்பது நாம் கடைப்பிடிக்கப்போகும் சுயகட்டுப்பாட்டில்தான் உள்ளது.
எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்ட மக்கள் இன்று முதல் அடுத்து வரும் 14 நாட்களை ஊரடங்கைத் தளர்வு காலமாகக் கருதாமல், தண்டனைக் காலமாக கருதி வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இக்காலத்தில் கூடுதல் பொறுப்புடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும். அப்போது தான் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் போதாவது புதிய தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.