Read in English
This Article is From Aug 14, 2019

ஜம்மூவில் கட்டுப்பாடுகள் தளர்வு, காஷ்மீரில் இன்னும் சில நாட்கள் இருப்போம்: போலீஸ்

"தற்போதைக்கு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருக்கிறது”

Advertisement
இந்தியா Edited by
Srinagar:

370வது சிறப்பு சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மூ காஷ்மீரில் அதிக கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தன. பாதுகாப்புப் படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில், ஜம்மூ பகுதியில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் காஷ்மீரில் இன்னும் சில நாட்களுக்குக் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். அவர், “ஜம்மூ காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது” என்றும் கூறியுள்ளார். 

நேற்று மத்திய உள்துறை அமைச்சகம், “ஜம்மூ காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பகுதி பகுதியாக நீக்கப்படும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஜம்மூ காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுவது குறித்தும் ஜம்மூ காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்பது குறித்தும் மத்திய அரசு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இந்நிலையில் ஜம்மூ காஷ்மீரில் இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஜம்மூ - காஷ்மீர் போலீஸின் மூத்த அதிகாரி முனிர் கான், “ஜம்மூவில் முழுவதுமாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் இன்னும் சிறிது காலத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும்.

சில இடங்களில் பெல்லட் குண்டுகளால் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போதைக்கு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருக்கிறது” என்று கூறினார். ஸ்ரீநகரில் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

Advertisement

அதிக கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது குறித்து அரசு தரப்பு, “கட்டுப்பாடுகள் இருப்பது தவறில்லை. உயிர்ச் சேதத்தைத் தடுக்க இதுதான் சரியானது” என்று நியாயம் கற்பித்துள்ளது. 

ஜம்மூ காஷ்மீரில் உள்ள 400 அரசியல் பிரபலங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்டி ஆகியோரும் அடங்குவார்கள். ஜம்மூ காஷ்மீர் தெருக்களில் சுமார் 50,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு இணைய மற்றும் போன் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 

Advertisement