வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளன.
New Delhi: அந்தமான் - நிகோபர் தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்பு வெளிநாட்டவர்கள் அந்தமான் - நிகோபருக்கு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இந்த கட்டுப்பாட்டை உள்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் மற்றும் ஆலோசனைகள் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டிருக்கிறது.
முன்னதாக மனிதர்கள் வாழக்கூடிய 29 தீவுகளுக்கும், மனிதர்கள் வாழாத 11 தீவுகளுக்கும் வெளிநாட்டவர்கள் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்பு இந்த இடங்களுக்கெல்லாம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திற்கு சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது.