என் வாழ்க்கையை என் விருப்பம் போல் வாழ்கிறேன்
Pune: இந்தக் கோடைகாலத்தில் சில வாரங்களுக்கு மின்சாரம் இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா…? குறைந்தபட்சம் சில நாட்களுக்கு இருக்க முடியுமா…? முடியவே முடியாது என்பதுதான் பதிலாக இருக்கும். 79 வயதான டாக்ட ஹேமா சேன் புனேயில் புத்வார் பேத் என்னுமிடத்தில் மின்சாரம் இல்லாத வீட்டில் தான் வசித்து வருகிறார். இயற்கையையும் சுற்றுச் சூழலையும் மிகவும் நேசிப்பதால் மின்சாரத்தை விரும்பவில்லை என்றே கூறுகிறார்.
“உணவு, உடை, தங்குமிடம்தான் அடிப்படைத் தேவைகளாக இருக்கின்றன. முந்தைய காலத்தில் மின்சாரம் என்பதே இல்லை. அதன்பின் தான் வந்தது. மின்சாரம் இல்லாமல் வாழப் பழகிக் கொண்டேன்” என்று கூறுகிறார். டாக்டர் ஹேமா சேன் தனது சொத்தாக ஒரு நாய் இரண்டு பூனை, மங்கூஸ் மற்றும் பல பறவைகள் உள்ளன என்று கூறுகிறார். இது இவர்களின் சொத்து என்னுடையது அல்ல. நான் அவர்களை பார்க்க மட்டுமே இங்கே இருக்கிறேன்” என்று அவர் கூறினார். “மக்கள் என்னை முட்டாள் என்று நினைக்கிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என் வாழ்க்கையை என் விருப்பம் போல் வாழ்கிறேன்” என்று டாக்டர் சேன் கூறுகிறார்.
புனே பல்கலைக்கழகமான சாவித்ரிபாய் புலேவில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் பல ஆண்டுகளாக கர்வவேர் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். புனேவின் புத்வர் பெத் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் வாழ்கிறார். இவருடைய வீடு மரங்கள் மற்றும் பறவைகளால் சூழப்பட்டது. ஒவ்வொரு நாள் காலையும் பறவையின் மென்மையான சத்தத்துடன் தொடங்குகிறது.
டாக்டர் சேன் ஏற்கனவே தாவரவியல் மற்றும் சூழலியல் குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை பதிப்பிக்கப்பட்டு தற்போது விற்பனையிலும் உள்ளது. வீட்டில் தனியாக இருக்கும் போது இப்போதும் புத்தகங்களை எழுதுகிறார். பறவை மற்றும் மரங்கள் குறித்து அவருக்கு தெரியாதது என்று எதுவும் இல்லை. “என் வாழ்நாள் முழுவதும் மின்சாரம் இன்றி தான்வாழ்ந்திருக்கிறேன். பலரும் என்னிடம் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடிகிறது என்று கேட்கிறார்கள். நான் மின்சாரத்துடன் எப்படி வாழ முடிகிறது என்று பதிலுக்கு கேள்வி எழுப்புகிறேன்” என்று கூறுகிறார். இந்தப் பறவைகள்தான் என் நண்பர்கள் எப்போது வீட்டு வேலை பார்த்தாலும் அவைகள் என் பக்கத்தில் வரும். மக்கள் பலரும் இந்த வீட்டை விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால், என்னால் இந்த மரம் மற்றும் பறவைகளை விட்டு எங்கும் இருக்க முடியாது என்று கூறுகிறார்.
மக்கள் பலரும் என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள். நான் எந்தவொரு செய்தியையோ அல்லது பாடத்தையும் யாருக்கும் அளிக்கவில்லை. புத்தரின் புகழ்பெற்ற மேற்கோளான ‘ உங்கள் வாழ்க்கைகான பாதையை நீங்களே தேர்வு செய்யுங்கள்' என்பதைத் தான் நான் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றார்.