This Article is From Apr 14, 2019

வேலூரில் தேர்தலை நிறுத்தவே வருமானவரித்துறை சோதனை! - மு.க.ஸ்டாலின்

வேலூரில் தேர்தலை நிறுத்தவே வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

வேலூரில் தேர்தலை நிறுத்தவே வருமானவரித்துறை சோதனை! - மு.க.ஸ்டாலின்

முன்னதாக நேற்று, நாமக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின் கூறும்போது, நாடாளுமன்றத்தின் தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறப் போகின்றது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் போகின்றோம்.

உடம்பில் உருவாகும் கெடுதலை விளைவிக்கக் கூடிய இரண்டு கட்டிகளாக, நோய்க் கிருமிகளாக இருந்து இந்த நாட்டை குட்டிச் சுவராக்கி கொண்டிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியையும் மோடியையும் அகற்ற வேண்டிய அவசியத்திற்கு நாம் வந்திருக்கின்றோம்.

உலக அளவில் பிரபலமான வாரப் பத்திரிகையொன்றில், சமீபத்தில், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 650 கோடி ரூபாய் கொடுத்து சட்டப்பேரவை தேர்தலை அதிமுக விலைக்கு வாங்கி இருக்கின்றது என கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார் மோடி. அதேபோல் தான் ஊழலையும் ஒரே இடத்தில் குவிக்க வேண்டும் என்கின்ற மனப்பான்மையோடு ஒரு ஹிட்லரைப் போல மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பாஜகவினர் தாமரை மலரும் – மலரும் - மலரும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அது குட்டிக்கரணம் போட்டு உருண்டு வந்தால் கூட மலருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது, மத்தியில் சர்வாதிகார மோடி ஆட்சியையும், மாநிலத்தில் உதவாத எடப்பாடி ஆட்சியை அகற்றவும் திமுகவுக்கு வாக்களியுங்கள். 40-க்கு 40 மக்களவைத் தொகுதியிலும், 22-க்கு 22 சட்டமன்ற தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பின் அதிமுக ஆட்சி அகற்றப்படும். வேலூரில் தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டம் போடுகின்றன. தேர்தலை நிறுத்தவே திட்டமிட்டு வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


 

.