This Article is From Nov 05, 2019

அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து தாசில்தாரை உயிருடன் கொளுத்திய நபர்… பதறவைக்கும் சம்பவம்!

Telangana News - இந்த சம்பவத்தில் விஜயாவைக் காப்பாற்ற முயன்ற டிரைவர் மற்றும் மேலும் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 

Telangana News - இந்த கொடூர சம்பவத்துக்குக் காரணம், சுரேஷ் முடிராஜு என்கிற நில உரிமையாளர்தான் என்று சொல்லப்படுகிறது.

Hyderabad:

அரசு அதிகாரிகளுக்கு எந்தளவு பாதுகாப்பு இருக்கிறது என்பதை கேள்வியெழுப்பும் வகையில் ஒரு சம்பவம் அண்டை மாநிலமான தெலங்கானாவில் (Telangana) நடந்துள்ளது. தெலங்கானாவின், அப்துல்லாபர்மத் என்கிற இடத்தில் தாசில்தாராக (Tehsildar) இருந்த விஜயா ரெட்டியை (Vijaya Reddy), அலுவலகத்துக்குள் நுழைந்து உயிருடன் கொளுத்தியதாக சொல்லப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், நில உரிமையாளர் ஒருவர், பாஸ்புக்குடன் இன்று விஜயாவின் அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளார். சுமார் அரை மணி நேரத்துக்குப் பின்னர் தாசில்தார் விஜயாவின் அலுவலகக் கதவு திறந்துள்ளது. அப்போது அவர், தீயில் எரிந்து கதறுவதைக் கேட்டு பதறியடித்துக் கொண்டு ஓடினர் அலுவலக ஊழியர்கள். கையில் கிடைத்ததை வைத்து ஊழியர்கள், விஜயாவின் மேலிருந்த தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் தீக்காயங்கள் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார் விஜயா. 

இந்த கொடூர சம்பவத்துக்குக் காரணம், சுரேஷ் முடிராஜு என்கிற நில உரிமையாளர்தான் என்று சொல்லப்படுகிறது. மண்ணெண்ணெய் பாட்டிலுடன் தாசில்தார் விஜயாவின் அலுவலகத்துக்குள் நுழைந்த அவர், இந்த காரியத்தைச் செய்துள்ளார் என்று தெரிகிறது. சம்பவத்தின் போது ஏற்பட்ட தீக்காயங்களுக்காக அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தில் விஜயாவைக் காப்பாற்ற முயன்ற டிரைவர் மற்றும் மேலும் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 

தெலங்கானாவில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதில் பல சுணக்கங்கள் நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. சுரேஷ் முடிராஜுவின் நில ஆவணங்களில் ஒரு பிழை இருந்துள்ளதாகவும், அது குறித்து அவர் தொடர்ந்து அரசு தரப்பில் முறையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. தவறை திருத்துவதற்கு அவர் நீதிமன்ற ஆணையையும் வாங்கி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தன் பிரச்னை தீராததால் அவர் விரக்தியடைந்துள்ளார். அதன் விளைவே இந்த சம்பவம்.

“சுரேஷ் முடிராஜு, இந்த சம்பவத்தை ஏதேச்சையாக அரங்கேற்றவில்லை. நன்கு திட்டம் போட்டுத்தான் செய்துள்ளார். இந்த சம்பவத்தினால் அவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் வேறு ஒருவரின் தூண்டுதலின் பெயரில் இப்படி செயல்பட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடத்துவோம். சீக்கிரமாக வழக்கை விசாரித்து, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தூக்குத் தண்டனை வாங்கித் தர முயல்வோம்,” என்று வழக்கை விசாரித்து வரும் ராச்கோண்டா போலீஸ் கமிஷனர், மகேஷ் பகவத் கூறியுள்ளார். 

இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் பற்றி, தெலங்கானா அமைச்சர், சபிதா இந்திரா ரெட்டி, “அரசு அதிகாரிகள், தங்களால் முடிந்த வரை மக்களுக்கு சேவையாற்றத்தான் நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால், அதை நிவர்த்தி செய்து கொள்வதற்கென்று ஒரு நடைமுறை இருக்கிறது,” என்று சம்பவத்தைக் கண்டித்துள்ளார். 


 

.