This Article is From Jun 23, 2018

'பனை நாடு' அமைப்பு – தமிழகத்தின் மாநில மரத்தை மீட்டெடுக்க முயற்சிக்கிறது!

உச்சி முதல் பாதம் வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன்களை தருபவை

'பனை நாடு' அமைப்பு – தமிழகத்தின் மாநில மரத்தை மீட்டெடுக்க முயற்சிக்கிறது!

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தின் ‘மாநில மரம்’ என்ற பெருமையுடைய பனைமரம்
  • கேட்டதை கொடுக்கும் ”பூலோகத்து கல்பகதரு“ என முன்னோர்கள் அழைத்தனர்
  • ‘பனை நாடு’ அமைப்பு பனை மரத்தை வளரச் செய்யும் முயற்சிகளை செய்துவருகிறது
பனைமரங்கள் தமிழரின் அடையாளம். தமிழர் வாழ்ந்த இடங்களிலெல்லாம் பனைமரம் வளர்ந்திருக்கிறது. தமிழகத்தின் ‘மாநில மரம்’ என்ற பெருமையுடைய பனைமரத்தின் ஓலைகளைத் தான் நம் முன்னோர்கள் எழுதப் பயன்படுத்தியுள்ளனர். இந்த மரம் குறைந்தது 60 வருடங்கள் வாழும். உச்சி முதல் பாதம் வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன்களை தருபவை. இத்தகைய சிறப்புகளை பெற்ற பனை மரத்தை கேட்டதை கொடுக்கும் தேவலோகத்து மரமான கற்பகதருவுக்கு ஒப்பிட்டு ”பூலோகத்து கல்பகதரு“ என்று நம் முன்னோர்கள் அழைத்தனர்.

மண்ணரிப்பு, வறட்சி மற்றும் புயல், என அனைத்திலும் தாக்கு பிடிக்கும் பனை மரம் நுங்கு, பனம்பழம், பதநீர், பனைவெல்லம், பனங்கிழங்கு, பனை ஓலையில் செய்யப்படும் பொருட்கள் (கூடைகள், காத்தாடிகள், பாய்கள், தொன்னைகள், குடைகள்) என எண்ணற்ற வகையில் பயன்படுகிறது. பனையேறிகளும், பனைமரமும் அழிந்து வரும் நிலையில் தன்னால் முடிந்த முயற்சிகளை ஒரு சிலர் செய்துவர ‘பனை நாடு’ அமைப்பு தமிழகத்தில் பனை மரத்தை மீண்டும் வளரச் செய்யும் முயற்சிகளை செய்துவருகிறது.
 
palm tree

‘பனை நாடு’ அமைப்பு தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில், இது பனை விதைகளை விதைப்பது, பனை மரத்தை பற்றிய விழிப்புணர்ச்சிகளை கொடுப்பது, பனைமரம் ஏறுவதற்கான பயிற்சிகள், பாரம்பரிய பனைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சிகள் முதலியவற்றை செய்து வருகிறது.   

குமரி மாவட்டத்தில் அதிகமாக கிடைக்கும் பனை விதைகளை சேகரித்து, தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் விதைக்கின்றனர். இது வரையில் 10,000 விதைகளை சேகரித்த ‘பனை நாடு’ அமைப்பு 5,000 விதைகளை  விதைத்திருக்கிறது.

‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கு ஏற்ப ஆனி, ஆடி மாதங்களில் விதைகளை விதைக்கின்றனர். இதுவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் விதைகளை விதைத்த ‘பனை நாடு’ அமைப்பு ஜூன் 20 அன்று சென்னையிலும், ஜுன் 21 அன்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலும் விதைகளை விதைத்தது.
 
palm tree

நேரமிருக்கும் போதெல்லாம் தன்னுடன் தன்னார்வ இளைஞர்களை இணைத்து கொள்வதாகக் கூறும் ‘பனை நாடு’ அமைப்பின் தலைவர் அருட்பணி காட்சன் சாமுவேல் ‘மொத்த தமிழ்நாடும் பனை நாடுதான். பனை விதைகளை விதைக்கும் அனைவருமே வாலன்டியர்ஸ் தான்’ என்கிறார். இதை செய்ய விருப்பமுடையவர்கள்  காட்சன் அவர்களை வாட்ஸ் அப் மற்றும் இ – மெயில் மூலம் தொடர்புக் கொள்ளலாம். ‘அமைப்பு வளர வேண்டும் என்பதை விட, பனை வளர வேண்டும்’ என்பது தான் அமைப்பின் நோக்கம் என்று கூறும் காட்சன் அவர்கள் நுங்கை மட்டும் சாப்பிடாமல் பனம் பழத்தையும் அதிகளவில் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார். எதிர்காலத்தில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பனை சார்ந்த பைகள், பனை சார்ந்த வீட்டு உபயோகப் பொருட்களென பனை சார்ந்த முன்னெடுப்புகள் வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
.