ஊரடங்கு நேரத்தில் சாலையில் சென்றவரை துரத்திய காண்டாமிருகம்! வைரல் வீடியோ
ஹைலைட்ஸ்
- மூடப்பட்ட கடை வீதிகளில் சுற்றித் திரியும் காண்டாமிருகங்கள்
- ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் ஒருவரை துரத்திச் சென்றது.
- இந்த வீடியோ சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது
நேபாளத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத சாலைகளில் காண்டாமிருகம் ஒன்று நடந்து செல்லும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த மார்ச்.24ம் தேதி ஒரு வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது ஏப்.15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்கு பரபரப்பாக காணப்படும் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன. மேலும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மக்கள் வெளியே வருவதை தவிர்க்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மூடப்பட்ட கடை வீதிகளில் காண்டாமிருகங்கள் சுற்றித் திரியும் வீடியோ சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோ, சித்வான் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு இல்லாத சமயங்களிலும், அங்கு கண்டாமிருகங்கள் காணப்படுவதென்பது சாதாரணமானது. அந்த தேசிய பூங்காவில் கணிசமான அளவில் கண்டாமிருகங்கள் உள்ளன.
இப்போது வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் காண்டாமிருகம் ஒரு சிலர் மட்டுமே இருக்கும் சாலையில் நடந்து செல்வதை காணலாம். தொடர்ந்து, சாலையில் நடந்து செல்லும் ஒருவரை அது துரத்துகிறது. பின்னர் சில விநாடிகளில், அது தன் ஆர்வத்தை இழந்து மீண்டும் அதன் சொந்த வழியில் செல்கிறது
ஆய்வுக்கு சென்ற காண்டாமிருகம் என்று குறிப்பிட்டு வனத்துறை அதிகாரி கஸ்வான் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். ஊரடங்கு இல்லாத காலத்திலும் காண்டாமிருகம் காட்டில் இருந்து வெளிவருவதை காணமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானதில் இருந்து 1.1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், 8,500க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
இந்த வீடியோவுக்கு பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.
முன்னதாக, கேரளாவில் யானை ஒன்று சாலையில் சுற்றித்திரியும் வீடியோ ஒன்றும் இதேபோல் வைரலானது குறிப்பிடத்தக்கது.